News

இந்தியாவின் முதல் கட்ட 5இலட்சம் கொவிட் 19 தடுப்பூசிகளுக்கு பணம் வழங்கப்பட்டதா!?

By In

க.பிரசன்னா

உலகளவில் பரவி வரும் கொவிட் 19 தொற்று நோயிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கு தடுப்பூசி மாத்திரமே ஒரே தீர்வாக கருதப்படுவதால் பிரஜைகளுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் கடந்த(2021) ஜனவரி 29 ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா, சீனாவின் சினோபார்ம், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் பைசர் பயோன்டெக் ஆகிய தடுப்பூசிகள் தற்போது இலங்கையில் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் சீனாவின் சினோவெக் தடுப்பூசியினை இலங்கையில் உற்பத்திசெய்யவும் அமெரிக்காவின் மொடெர்னா தடுப்பூசியினை இறக்குமதி செய்யவும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இருப்பினும் இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு பாரியளவிலான நிதியினை செலவு செய்ய வேண்டிய தேவை காணப்படுகின்றது. அதற்கு தடுப்பூசிகளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மற்றும் கேள்வியின் காரணமாக உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயிக்கின்ற விலையின் அடிப்படையிலேயே தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகள் மற்றும் விலைகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலமாக ஓளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சுக்கு பெப்ரவரி மாதம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் (SM/PSRP/02/02/33/2021) நான்கு மாதங்களின் பின்னர் தகவல்கள் தரப்பட்டன.

தற்போது நாட்டுக்கு அதிகளவான தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தாலும் இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் மார்ச் மாதத்துக்கு முன்னரான தகவல்கள் மாத்திரமே எமக்கு வழங்கப்பட்டது. அந்தவகையில் இலங்கைக்கு மார்ச் மாதம் வரையில் ஐந்து இலட்சத்து 15ஆயிரம் (515,000) டோஸ் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் இந்தியாவிலிருந்து கொவிஷில்ட் தடுப்பூசி 5இலட்சமும் ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக் வி 15ஆயிரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் கொவிஷில்ட் தடுப்பூசியின் 10 டோஸ் குப்பியொன்று 10ஆயிரத்து 287ருபா 38சதம்,(10,287.38ரூபா 51.5 அ.டொலர்) ஆகவே 1 டோஸ் ஆயிரத்து 28ரூபாவுக்கு (1,028.74ரூபா.5.15 அ.டொலர்) இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி 5 டோஸ் தடுப்பூசியானது ஒன்பதாயிரத்து 947ரூபா 51சதத்திற்கு (9,947.51 ரூபா 49.80 அ.டொலர்) வாங்கப்பட்டுள்து, அதன்படி 1 டோஸ் ஆயிரத்து 989 ரூபா 50சதமாகும். (1,989.50 ரூபா9.96 அ.டொலர்) 

இதேவேளை கொவிஷில்ட் தடுப்பூசியினை இறக்குமதி செய்வதற்கு போக்குவரத்து செலவுகள் உட்பட 51கோடியே 53இலட்சத்து 46ஆயிரத்து 540ரூபா 50சதம் (515,346,540.50) செலவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கைக்கு கொவிஷில்ட் தடுப்பூசியானது கோவெக்ஸ் திட்டத்தின் மூலம் இலவசமாக இந்தியாவினால் வழங்கப்பட்டதாகவே விளம்பரம் மேற்கொள்ளப்பட்டது. கோவெக்ஸ் திட்டமானது, தடுப்பூசிகள் மற்றும் நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டணி, தொற்றுநோய்களுக்கான உற்பத்தி கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட திட்டமாகும். https://www.thehindubusinessline.com/news/indias-gift-of-5-lakh-doses-of-covishield-vaccines-to-reach-sri-lanka-on-thursday/article3

கொவிட் 19 தடுப்பூசியின் வளர்ச்சி மற்றும் உற்பத்தியினை விரைவுபடுத்துவதும் உலகின் ஒவ்வொரு நாட்டுக்கும் நியாயமான மற்றும் சமமான அணுகலை உறுதி செய்வதும் இதன் நோக்கம். இதன் அடிப்படையிலேயே கொவிஷில்ட் தடுப்பூசியினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடமிருந்து இலங்கை ஜனாதிபதி அன்பளிப்பாக பெற்றுக்கொண்டிருந்தார்.  ஆனால் குறித்த தடுப்பூசிகளுக்கு 51கோடியே 53இலட்சத்து 46ஆயிரத்து 540ரூபா 50சதம் செலவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்தியாவினால் வழங்கப்பட்ட கொவிஷில்ட் தடுப்பூசிக்காக மாத்திரம் 51கோடியே 43இலட்சத்து 70ஆயிரம்ரூபா (514,370,000 ரூபா) செலவு செய்யப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துக்காக 9 இலட்சத்து 76ஆயிரத்து 540ரூபா 50சதம் (976,540.50) செலவு செய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை ரஷ்யாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் தொகுதியினை இறக்குமதி செய்வதற்கு போக்குவரத்து செலவுகள் உட்பட 3 கோடியே 20இலட்சத்து 30ஆயிரத்து 764ரூபா (32,030,764.31) செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் கொள்வனவுக்கு மாத்திரம் 2கோடியே 98இலட்சத்து 42ஆயிரத்து 500ரூபா (29,842,500ரூபா) இறக்குமதிக்கும் போக்குவரத்திற்கு 2கோடியே 18இலட்சத்து 8ஆயிரத்து 264ரூபா 31சதம் (2,188,264.31) செலவு செய்யப்பட்டுள்ளதாகவே மேற்படி தகவல்களின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது. 

இதேவேளை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சினோபார்ம் தடுப்பூசியும் அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு டோஸ் தடுப்பூசி 15 அ.டொலருக்கு கொள்வனவு செய்யப்பட்டதாகவும் பங்களாதேஷ் ஒரு டோஸ் சினோபார்ம் தடுப்பூசியினை 10 அ.அடாலருக்கு கொள்வனவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சையை தொடர்ந்து இலங்கையில் உற்பத்தி செய்யப்படவுள்ள சினோவக் தடுப்பூசியின் விலையினை இரகசியமாக பேணுவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் மருத்துவ விநியோக பிரிவினால் மேலும் இலங்கைக்கு 1கோடியே 80இலட்சம் (18,000,000) கொவிஷில்ட் டோஸ் தடுப்பூசிகளும் 1கோடியே 30இலட்சம் (13,000,000) டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளும் 50இலட்சத்து 580 டோஸ்(5,000,580) பைசர் தடுப்பூசிகளும் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் மத்தியில் அனைத்து பிரஜைகளுக்கும் தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. அதேவேளை வழங்கப்படும் தடுப்பூசிகள் மற்றும் அதன் விலை தொடர்பில் அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது. அன்பளிப்பாக வழங்கப்படும் தடுப்பூசிகளுக்கும் கட்டணம் அறவிடும் நடைமுறை இருக்கின்றதா என்பதை அரசாங்கமே தெளிவுபடுத்த வேண்டும். 

News

10 வருடங்களில் பொலிஸ் சேவையில் இருந்து 2847 பேர் இடைநிறுத்தம்!

ந.லோகதயாளன் கடந்த 10 ஆண்டுகளில்  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து 2847 பேர் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்…

By In
News

போதையில் மூழ்கும் சமூகம்;  அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

2023ஆம் ஆண்டு மாத்திரம் 162,088 பேர் கைது! மொஹமட் ஆஷிக் போதைப்பொருள் விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும் பாரிய நெருக்கடியாக உள்ளது. எமது நாட்டில், அதை…

By In
News

பூமியை நான்கு தடவைகள் சுற்றிவரும் அளவிற்கு இலங்கையை வானில் சுற்றியுள்ள மஹிந்த ராஜபக்ஷ

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி விமானப்படைத் தலைமையகத்திலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம்…

By In
News

ஜனாதிபதி அலுவலகத்தின் சொகுசு வாகனங்கள் ஏலத்திற்கு முன்னர் பகிர்ந்தளிக்கப்பட்ட விதம்!

● கோட்டாபயவின் பிரத்தியேக பணியாளர்களுக்கு 11 வாகனங்கள் ● ரணிலின் பிரத்தியேக பணிக்குழாமிற்கு 68 வாகனங்கள் ஜனக சுரங்க வாகனங்களை பொதுவாக காட்சியறைகளில் வைத்தே பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *