“ஒரு வீடு வாழ்வதற்கான ஒரு இயந்திரம்.” -லு கார்பூசியர் (பிரெஞ்சு கட்டிடக் கலைஞர்)
மனித வாழ்வின் மிக முக்கிய அடிப்படை தேவைகளில் ஒன்றாகவே உறையுள்/ வசிப்பிடம்/ வீடு காணப்படுகிறது. இது நிபந்தனையற்ற அன்பு, மகிழ்ச்சி மற்றும் ஆறுதலளிக்கும் ஒரு இடமாக காணப்படுகிறது. எவ்வாறாயினும் இன்றளவிலும் வசிப்பதற்கு வீடுகளின்றி தவிக்கும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களிற்கு ஒரு நிரந்தர குடியிருப்பை வழங்க உலகளவில் பல அரச நிறுவனங்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இலங்கையின் பதுளை மாவட்டத்தில் ஹாலிஎல மொரகல்லையில் ஆறு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டம் இன்றுவரை பூர்த்தி செய்யப்படாதமைக்கான காரணத்தை அறிவதற்காக 2016 ஆம் ஆண்டின் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு அனுப்பிய கோரிக்கைக்கான பதில்களை அடிப்படையாக கொண்டே இந்த கட்டுரை அமையவிருக்கின்றது.
“உடவெவ கிராமசக்தி மாதிரி கிராமம்” எனும் பெயரிலான பதுளை மாவட்ட ஹாலிஎல மொரகல்லையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் 2018.09.05 அன்று நாட்டப்பட்டிருப்பதோடு, ஆரம்பிக்கப்பட்ட திகதியிலிருந்து 6 மாதங்களுக்குள் பூர்த்தி செய்வதற்கே திட்டமிடப்பட்டிருந்தது. திட்ட அறிக்கையின்படி 16 வீடுகளை நிர்மாணிப்பதற்காகவே திட்டமிடப்பட்டிருந்தது. உத்தேச வீடமைப்பு வரைப்படத்தின்படி இரண்டு அறைகள், ஒரு சமையலறை, ஒரு வதிவிடவறை, மற்றும் மலசலகூடத்தினை உள்ளடக்கிய ஒரு வீடாகாவே இந்த வீட்டுத்திட்டம் நிர்மாணிக்கப்படுவதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை பதிலளித்திருந்தது.
இந்த வீட்டுத்திட்டத்தின் மொத்த பெறுமதி என்ன என்ற எமது கேள்விக்கு, வீடமைப்பு மானியமாக வழங்க தீர்மானிக்கப்பட்ட தொகை 7.90 மில்லியன் ரூபாய், நுழைவுப்பாதைகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை 3.00 மில்லியன் ரூபாய், பொதுவான ஒரு கட்டிடத்தினை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 0.6 மில்லியன் ருபாய் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த திட்டத்திற்கான நிதியுதவியினை வழங்கிய நிறுவனங்கள் குறித்த கேள்விக்கு, வீடமைப்பு நிர்மாண பணிகளுக்கான நிதி பங்களிப்பு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் வழங்கப்பட்ட அதேவேளை பொது வசதிகளுக்காக பிரதேச அரசியல் தலைமையில் பெற்றுக்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
இந்த திட்டத்தின் தற்போதைய நிலை குறித்த வினாவுக்கு பின்வருமாறு பதிலளித்திருந்தது.
- அத்திவாரம் பூர்த்தி செய்யப்பட்டுள்ள (வீடுகள்)பயனாளிகளின் எண்ணிக்கை 05 ஆகும்.
- ஜன்னல் மட்டம் வரையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள(வீடுகள்) பயனாளிகளின் எண்ணிக்கை 03 ஆகும்.
- “லிண்டல்” மட்டம் வரையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள (வீடுகள்) பயனாளிகளின் எண்ணிக்கை 05 ஆகும்.
- கூரை வரை நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்துள்ள (வீடுகள்) பயனாளிகளின் எண்ணிக்கை 01 ஆகும்.
- கூரையிடப்பட்டுள்ள (வீடுகள்) பயனாளிகளின் எண்ணிக்கை 02 ஆகும்.
இந்த வீடமைப்புத் திட்டம் இன்றுவரை பூர்த்தி செய்யாமைக்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் வினவியதற்கு, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை கீழ்வருமாறு பதிலளித்திருந்தது. இந்த வேலைத்திட்டம் கிராம சக்தி மானிய வேலைத்திட்டத்தின் கீழ் 2018.09.05 அன்று ஆரம்பிக்கப்பட்டது. கிராம சக்தி மானிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் பாரியளவில் காணப்படுகின்றன. இதன் கீழ் ஆரம்பிக்கப்பட்ட அநேகமானவை நிர்மாண மட்டங்களுக்கு ஏற்ற ரூபா. 40,000.00 இருந்து ரூபா 500,000.00 வரை கட்டம் கட்டமாக நிதி வழங்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளின் நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்வதற்காக மேலும் பாரிய நிதி தேவைப்படுகிறது.
எனவே இதுவரை வழங்கப்பட்ட நிதியினைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள மற்றும் மிகுதி வேலைகளை பூர்த்தி செய்வதற்கு தொடர்ந்தும் தேவைப்படும் நிதியின் அளவினையும், உண்மையில் வீட்டுக்கான தேவை காணப்படும் பயனாளிகள் பற்றியும் அடையாளம் காண்பதற்கு மாவட்ட மட்டத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்படும். மாவட்ட முகாமையாளரிடமிருந்து தகவலைப பெற்றுக்கொண்டு அதன்படி தொடர்ந்தும் தேவைப்படும் நிதியின் அளவினைத் தீர்மானித்து அதனை திறைசேரியிடமிருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் உடனடியாக இந்த திட்டங்களில் உள்ள பூர்த்தி செய்யப்படாத வீடுகளின் மிகுதி நிர்மாண வேலைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி வழங்கி இந்த திட்டத்தின்படி நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதனைத் தெரிவித்துக்கொள்வதாக பதிலளிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் இன்றுவரை இந்த திட்டம் பூர்த்தி செய்யப்படாமைக்கான முக்கிய காரணம் நித்திப்பற்றாக்குறை என்பதாக இருக்கும் அதேவேளை, உண்மையான பயனாளிகளைக் கண்டறிவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் பெருமளவில் தாக்கம் செலுத்துகின்றன.
Recent Comments