News

‘ஆயிரம் தேசிய பாடசாலைகள்’ வேலைத்திட்டம் அப்பட்டமான பொய்!

By In

சாமர சம்பத்

பாடசாலை கல்வி என்பது இலங்கையில் ஒழுங்கற்ற நிலையில் உள்ளதால், அனைவரும் பிரபலமான பாடசாலைகள் அல்லது தேசிய பாடசாலைகளை நாடிச்செல்வது நாகரீகமாகிவிட்டது. எமக்கருகில் எத்தனையோ பாடசாலைகள் உள்ளபோதும், சகல பாடசாலைகளிலும் சமமான கல்வியை வழங்காத காரணத்தால், போலியான ஆவணங்களையேனும் தயாரித்து தமது பிள்ளைகளை தேசிய பாடசாலைகளில் சேர்ப்பதற்கு பெற்றோர் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக, தேசிய பாடசாலைகளை உருவாக்குவதும், அதிகரிப்பதும் தற்போது அரசியல் வாக்குறுதிகளாக மாறிவிட்டன. “தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000ஆக உயர்த்துதல்” என்பது தேர்தல் வாக்குறுதியாகவும் காணப்பட்டது. 

தேசிய பாடசாலைகள்

இலங்கையில் தற்போது காணப்படும் பாடசாலைகள் பல்வேறு விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த வகைப்படுத்தல் அனைவருக்கும் கடினமான விடயமென, தற்போது கல்வித்துறை அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனால், விரைவில் புதிய வகைப்படுத்தலினை அறிமுகப்படுத்துவதற்கு கல்வியமைச்சு தயாராகி வருகின்றது. கல்வியமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கும் பாடசாலைகள் மற்றும், ஆசிரியர் இடமாற்றங்கள் உட்பட அனைத்து நடவடிக்கைகளும் கல்வியமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படும் பாடசாலைகள் யாவும் பொதுவாக தேசிய பாடசாலைகள் என அழைக்கப்படுகின்றன. ஏனைய பாடசாலைகள் யாவும் மாகாண பாடசாலைகள் என அழைக்கப்படுகின்ற நிலையில், ஆசிரியர் இடமாற்றங்கள் உள்ளடங்கலான குறித்த பாடசாலைகளின் செயற்பாடுகள் யாவும் மாகாண சபையினாலும் மாகாண கல்வித் திணைக்களத்தினாலும் மேற்கொள்ளப்படுகின்றன. எவ்வாறாயினும், வளப்பங்கீட்டின் அடிப்படையில் நோக்கினால், தேசிய பாடசாலைகள் நன்கு அபிவிருத்தியடைந்துள்ளமை தெளிவாகின்றது. இப்பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லை. பரீட்சை  பெறுபேறுகள் உயர்ந்த நிலையில் உள்ளன. மாகாண பாடசாலைகளை பொறுத்தவரை இவை யாவும் மிகவும் குறைந்த மட்டத்தில் இருப்பதால், நாட்டில் தேசிய பாடசாலைகளுக்கு தேவையற்ற போட்டிநிலை உருவாக்கப்பட்டுள்ளது. 

ஆயிரம் தேசிய பாடசாலைகள்

நாட்டில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிப்பதாக, கடந்த அரசாங்கத்தின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் வாக்குறுதி வழங்கியிருந்தார். அதன் பிரகாரம், 2022ஆம் ஆண்டில் ஆயிரம் தேசிய பாடசாலைகள் உருவாக்கப்படும் என அறிவிக்கும் தேசிய வைபவம் இடம்பெற்றதோடு, தேசிய பாடசாலைகள் என்ற பெயர்ப்பலகைகளுடன் நாடளாவிய ரீதியில் இன்றும் பல்வேறு பாடசாலைகள் காணப்படுகின்றன. ஆனால், சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தேசிய பாடசாலைகள் என்ற நாமத்தை கல்வியமைச்சு வழங்குகின்றது. இந்நிலையில், பாடசாலைக் கட்டமைப்பில் காணப்படும் தேசிய பாடசாலைகள் தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, பாடசாலை மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளமை தெரியவருகின்றது. அதாவது, ஆயிரம் தேசிய பாடசாலைகள் உருவாக்கப்படாமல் 23 தேசிய பாடசாலைகள் மட்டுமே பாடசாலை கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. 

 மொனறாகலையிலுள்ள சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலை என, கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெயரிட்டு, ஆயிரம் தேசிய பாடசாலைகள் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். “சுபீட்சத்தின் நோக்கு” என்ற கொள்கைப் பிரகடனம் மேலும் ஒருபடி நனவாகி, ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சிறந்த எதிர்காலத்திற்கான திறமையான பிள்ளைகளை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு கல்வி முறைமையில் பல கொள்கைத் தீர்மானங்களையும் சீர்திருத்தங்களையும் மேற்கொள்வதற்கான அடிப்படை அடித்தளமாக இந்தத் தீர்மானம் அமுல்படுத்தப்படும் எனவும் கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டிருந்தார். அத்தோடு, சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அளவுகோல்களின் அடிப்படையில் விஞ்ஞான முறைப்படி தெரிவுசெய்யப்படும் பாடசாலைகளே தேசிய பாடசாலைகளாக மாற்றப்படும் என முன்னாள் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். 

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை அப்போது 374ஆக காணப்பட்டன. மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கையில் இது 3.6 வீதமாகும். அதனைவிட, 2022ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை 23 மேலதிக பாடசாலைகள் மாத்திரமே தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. 

ஒரு பாடசாலைக்கு 2 மில்லியன் ரூபாய்

ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள மூன்று பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்படுமென அப்போது அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், அவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கு தலா 2 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது. குறித்த பணத்தினை பயன்படுத்தி அப்பாடசாலைகளுக்கு பெயர்ப்பலகைகளும் நினைவுப்பலகைகளும் தயாரிக்கப்பட்டு தேசிய பாடசாலையாக்கும் வைபவம், பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இனிதே நடத்தப்பட்டுள்ளது. சில பாடசாலைகளில் மாணவர்களுக்கு போதிய மலசலகூட வசதிகள்கூட இல்லாத நிலையிலும், இந்த பணத்தை பெயர்ப்பலகைகளுக்காக மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். அதாவது, இப்பாடசாலைகள் பெயரளவில் தேசிய பாடசாலைகளாக மாறியுள்ளபோதும், நடைமுறையில் மாகாண பாடசாலைகளாகவே உள்ளன. கடந்த காலத்தில் தேசிய பாடசாலைகளாக மாறிய 23 பாடசாலைகளின் பெயர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. 

கல்கிஸ்ஸ விஞ்ஞான கல்லூரி, கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுர வித்தியாலயம், தொம்பே தேவி பாலிகா மகா வித்தியாலயம், வாதுவ மத்திய மகா வித்தியாலயம், கொல்வின் ஆர். டி. சில்வா வித்தியாலயம், ராஜசிங்க மகா வித்தியாலயம், ஹட்டன் புனித ஷ்ரெப்ரியல் வித்தியாலயம், விலஹந்துவ ஜனாதிபதி மகளிர் வித்தியாலயம், புஹூல்வெல்ல மத்திய மகா வித்தியாலயம், புவக்தண்ட தம்மபால மகளிர் வித்தியாலயம், பேதுருதுடுவ மெதடிஸ்ட் உயர் மகளிர் கல்லூரி, பலாலி மத்திய கல்லூரி, கல்முனை முஹம்மது மகளிர் கல்லூரி, மஹதிவுல்வெல மகா வித்தியாலயம், உஹூமீய டி. எஸ். சேனாநாயக்க மகா வித்தியாலயம், லுணுவில பௌத்த மகளிர் வித்தியாலயம், தம்புத்தேகம மஹா வித்தியாலயம், கெக்கிராவ வித்தியாரத்ன வித்தியாலயம், சியம்பலாண்டுவ மகா வித்தியாலயம், பிபிளை யசோதரா மகளிர் கல்லூரி, குருவிட்ட மத்திய கல்லூரி, ரத்நாக புனித ஜோன் தமிழ் வித்தியாலயம், கேகாலை ஸ்வர்ணஜயந்தி மகா வித்தியாலயம்.

இனி தேசிய பாடசாலைகள் உருவாக்கப்படமாட்டாது

தற்போதைய கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் இது தொடர்பாக வினவியபோது, ஆயிரம் தேசிய பாடசாலைகள் வேலைத்திட்டம் இடம்பெறவில்லை என்பதை ஏற்றுக்கொண்டார். மேலும், இது பொருத்தமற்ற வேலைத்திட்டம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டத்தை நிறுத்துவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

”ஒரு பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள மூன்று பாடசாலைகள் என்ற அடிப்படையில், தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் (கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ்) முன்மொழியப்பட்டது. மாகாண சபைகளின் கீழுள்ள பாடசாலைகளே தேசிய பாடசாலைகளாக மாற்றப்படும். பின்னர் ஆயிரம் பாடசாலைகளை நிர்வகிக்க வேண்டிய நிலை கல்வியமைச்சு என்ற ரீதியில் எம்மையே சாரும். இது மிகவும் கடினமான பணியாகும். இந்தப் பணி எந்தளவிற்கு நடைமுறைச் சாத்தியமானது என்ற கேள்வி எழுந்தது.

தேசிய பாடசாலைகளாக பெயரிடுவதற்கு தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கு 2 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த பாடசாலைகளுக்கான வாயிற்கடவைகளை அமைக்கவும் பெயர்ப்பலகைகளை அமைப்பதற்கும் அந்தப் பணத்தை செலவழித்து  முடித்துவிட்டனர். ஆனால் தற்போதுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கையை அப்படியே வைத்துவிட்டு, வேறு எந்தப் புதிய பாடசாலையையும் தேசிய பாடசாலையாக மாற்றாமல், அமைச்சின் கீழ் கொண்டுவராமல் அவற்றை மாகாண சபை நிர்வாகத்தின் கீழேயே வைத்திருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய அல்லது மாகாண என்ற விடயம் இப்போது எமக்குத் தேவையில்லை. பாடசாலை அபிவிருத்தியே இப்போது அவசியமானது. பின்னர் தேசிய ரீதியாக என்றாலும் மாகாண ரீதியாக என்றாலும் அபிவிருத்தி செய்ய முடியும். பணமின்றி இது இரண்டுமே சாத்தியமற்றது. வெறும் பெயர்ப்பலகையை மாற்றியமைப்பதால், தேசிய பாடசாலையாக மாறிவிட முடியாது. பாடசாலை நிர்வாகம் பற்றிய புரிதலுடன் மேற்கொள்ளப்பட்ட பணியாக இதனை நான் கருதவில்லை.

எவ்வாறாயினும், தற்போது காணப்படும் பாடசாலை வகைப்படுத்தல் தன்மையில் தெளிவில்லை. அது தொடர்பாக விரைவில் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்படும். நாடெங்கும் 1250 பாடசாலை கூட்டணிகள் அமைக்கப்படும். இதில், அருகருகே உள்ள பாடசாலைகள் கூட்டிணைந்து செயற்படும். அவற்றிலிருந்து முன்னணி பாடசாலையொன்று உருவாக்கப்படும். இதன்மூலம், ஆரம்ப பிரிவுகளில் உள்ள பிள்ளைகள் புலமைப்பரிசில் ஊடாக உயர்நிலைக்குச் செல்வர். அவ்வாறு கிடைக்காதவர்களுக்கு, தரம் 13 வரை தொடர்ச்சியாக கல்வியை வழங்கக்கூடிய பாடசாலையை வழங்குவதே எமது எதிர்பார்ப்பாகும். அடுத்த வருடம் முதல் நாம் கூட்டிணைந்து செயற்படும் எண்ணக்கருவை செயற்படுத்த எதிர்பார்க்கின்றோம். இதனூடாக, நகரத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற மனநிலையிலிருந்து விடுபடவும், ஆசிரியர்களில் சமநிலையை பேணுவதோடு, வளப்பங்கீடும் இலகுவாக அமையும்” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். 

கல்வி போன்ற துறைகள் தொடர்பாக அரசியல் தீர்மானங்களை எடுக்கும்போது, ஒருதடவை, இருதடவை அன்றி பலதடவைகள் சிந்திக்க வேண்டும் என்பதை இந்த விடயத்திலிருந்து புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. பிள்ளைகளின் கல்வியை அரசியலுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. இல்லாவிட்டால், பாதிக்கப்படுவது அப்பாவிக் குழந்தைகளே! 

News

20 அரச நிறுவனங்களின் மூலம் அரசாங்கத்துக்கு 85 ஆயிரம் கோடி ரூபா இழப்பு!

க.பிரசன்னா நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மறுபுறம் அரசுக்கு அதிக செலவை…

By In
News

2025 மார்ச் முதல்முழுமையாக அமுலுக்கு வரும் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம்

ஜனக சுரங்க தனிப்பட்ட தரவின் செயலாக்கத்தை ஒழுங்குபடுத்துதல், தனிப்பட்ட தரவைப் பாதுகாத்தல், தரவு பங்களிப்பாளர்களின் உரிமைகளை அடையாளம் கண்டு வலுப்படுத்துதல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு, இலங்கை பிரஜைகளுக்கு…

By In
News

ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதை உறுதிப்படுத்தும் பாராளுமன்ற தரவுகள்!

தனுஷ்கசில்வா ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களின் ஒரு தசாப்தகால வரலாற்றை இலங்கை நாடாளுமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது. 2006 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஊடகவியலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அபாயகரமான…

By In
News

எல்லைகள் வரையறுக்கப்படாது தனியார் பல்கலைக்கழகத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள கீரிமலை ஜனாதிபதி மாளிகை!

ந.லோகதயாளன் கீரிமலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைத்த ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பிரதேசமும் ஆண்டொன்றிற்கு 10 ஆயிரம் டொலர்களுக்கு தனியார் பல்கலைக் கழகத்திற்கு குத்தகைக்கு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *