க.பிரசன்னா
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவரும் கருத்துக்கள் அவர்களின் சிறப்புரிமைகளுக்கு அரச நிதி அதிகளவு விரயம் செய்யப்படுவதை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை மட்டுப்படுத்துவது தொடர்பில் கே.டி.சித்ரசிறி குழுவின் அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்நிலையில் இலங்கையின் ஜனாதிபதிகளாக பதவி வகித்தவர்கள் தங்களுடைய தனிப்பட்ட நலன்களுக்காகவும் தங்களுடைய ஆதரவாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்காகவும் பொது நிதியை பயன்படுத்தி அதிகார துஸ்பிரயோகம் செய்தமை வரலாறுகளில் பதிவாகியுள்ளது. இதில் இலங்கையின் ஜனாதிபதிகள் தங்களுக்கேற்றவகையில் பிரத்தியேக செயலாளர்கள் அல்லது தனிப்பட்ட பணியாட்குழுக்களை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு காணப்படுகின்றது. இதை முன்னாள் ஜனாதிபதிகள் தங்களுடைய பதவிக் காலத்தில் எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதை அறிவதே இதன் நோக்கமாகும்.
இதனடிப்படையில் இலங்கையின் ஜனாதிபதிகளின் பிரத்தியேக செயலாளர்கள் அல்லது தனிப்பட்ட பணியாட்குழுக்கள் மற்றும் அவர்கள் பெற்றுக்கொண்ட சலுகைகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு அமைவாக முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் பணியாட்குழுக்கள் தொடர்பான தகவல்கள் மாத்திரம் வழங்கப்பட்டிருந்தது.
2010 ஆம் ஆண்டுக்குப்பின்னர் நான்கு முன்னாள் ஜனாதிபதிகள் இலங்கையை ஆட்சி செய்துள்ளனர். இதில் மஹிந்த ராஜபக்ச 157 தனிப்பட்ட பணியாட்களையும் மைத்திரிபால சிறிசேன 82 தனிப்பட்ட பணியாட்களையும் கோட்டாபய ராஜபக்ச 40 தனிப்பட்ட பணியாட்களையும் ரணில் விக்ரமசிங்க 118 தனிப்பட்ட பணியாட்களையும் தங்களது பதவி காலத்தில் நியமித்திருந்தனர்.
குறித்த தனிப்பட்ட பணியாட்களுக்கென அடிப்படை சம்பள கொடுப்பனவு, வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு, விசேட கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு, போக்குவரத்து கொடுப்பனவு, இடைக்கால கொடுப்பனவு, மொழி முகாமைத்துவ கொடுப்பனவு, நிர்வாக கொடுப்பனவு, பணி வருகை கொடுப்பனவு மற்றும் 1/3 கொடுப்பனவு என பல்வேறு கொடுப்பனவுகள் மாதாந்தம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இதன்மூலம் முன்னாள் ஜனாதிபதிகள் தங்களுடைய சிறப்புரிமைகளை பயன்படுத்தி தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பதவிகளை வழங்கி பாரிய பொது நிதியை செலவிட்டுள்ளமையை அறியமுடிகின்றது.
ரணில் விக்ரமசிங்க (2022 ஜூலை – 2024 செப்டெம்பர்)
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த 26 மாதங்களில் 118 பேரை தன்னுடைய தனிப்பட்ட பணியாளர்களாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக நியமித்துள்ளார். இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் பதவிகள் வழங்கப்பட்டிருந்தன. குறித்த பணியாட் தொகுதியில் 28 சிரேஸ்ட ஆலோசகர்கள் (9 கௌரவ ஆலோசகர்கள்), 12 பணிப்பாளர் நாயகம் பதவிகள், 71 பணிப்பாளர்கள், 6 ஒருங்கிணைப்புச் செயலாளர்கள் மற்றும் ஒரு தனிப்பட்ட செயலாளர் ஆகியோர் உள்ளடங்குவர். குறித்த பணியாட்குழுவிற்கு மாதாந்த கொடுப்பனவுகளுக்கு மாத்திரம் 11.46 மில்லியன் ரூபாவும் 13,622 லீற்றருக்கான எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர்களில் 15 பேருக்கு பல்வேறு கொடுப்பனவுகளும் இருவருக்கு எரிபொருள் கொடுப்பனவு மாத்திரமும் வழங்கப்பட்டிருந்தது. மேலும் இருவருக்கான கொடுப்பனவுகள் ஜனாதிபதி செயலகத்தால் மேற்கொள்ளப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர்களில் 15 பேருக்கு மாத்திரம் மாதாந்த கொடுப்பனவுகளுக்காக 20 இலட்சம் ரூபாவும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர்களில் 14 பேருக்கு மாதாந்தம் 2370 லீற்றர் எரிபொருளுக்கான கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது.
பணிப்பாளர் நாயகங்களாக நியமிக்கப்பட்ட 12 பேரில் 11 பேருக்கான கொடுப்பனவுகளுக்கு மாத்திரம் மாதாந்தம் சுமார் 11.1 இலட்சம் ரூபாவும் 12 பணிப்பாளர் நாயகங்களுக்கு மாதாந்தம் 1815 லீற்றர் எரிபொருளுக்கான கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது.
பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்ட 71 பேரில் 65 பேருக்கான கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் மாதாந்தம் 77.5 இலட்சம் ரூபாவும் 61 பணிப்பாளர்களுக்கு மாதாந்தம் 8235 லீற்றர் எரிபொருளுக்கான கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் 6 ஒருங்கிணைப்புச் செயலாளர்களுக்கு மாதாந்த கொடுப்பனவுகளுக்கு மாத்திரம் 4.9 இலட்சம் ரூபாவும் மாதாந்தம் 967 லீற்றர் எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளருக்கு மாதாந்தம் 110,000 ரூபா கொடுப்பனவும் 235 லீற்றர் எரிபொருளுக்கான கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பணியாட்குழுவில் இருந்த எட்டு பேருக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தின் ஊதிய பேரேடு பதிவுகளில் எவ்வித தகவல்களும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச (2019 நவம்பர் – 2022 ஜூலை)
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த 32 மாதங்களில் 40 பேரை தன்னுடைய தனிப்பட்ட பணியாளர்களாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக நியமித்துள்ளார். குறித்த பணியாட் தொகுதியில் 9 சிரேஸ்ட ஆலோசகர்கள், 4 பணிப்பாளர் நாயகங்கள், 23 பணிப்பாளர்கள், 4 ஒருங்கிணைப்புச் செயலாளர்கள் மற்றும் ஒரு தனிப்பட்ட செயலாளர் ஆகியோர் உள்ளடங்குவர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட சிரேஸ்ட ஆலோசகர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் ஊதிய பேரேடு பதிவுகளில் எவ்வித தகவல்களும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட மூவரில் இருவருக்கான மாதாந்தம் கொடுப்பனவுகளுக்காக 131,026 ரூபாவும் 340 லீற்றருக்கான எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கான கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் ஊதிய பேரேடு பதிவுகளில் எவ்வித தகவல்களும் இல்லை. ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளருக்கு மாதாந்தம் 107,500 ரூபா கொடுப்பனவும் 240 லீற்றர் எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது.
பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட நால்வரில் இருவருக்கான மாதாந்த கொடுப்பனவுக்காக மாத்திரம் 223,000 ரூபாவும் 310 லீற்றருக்கான எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இருவருக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் ஊதிய பேரேடு பதிவுகளில் எவ்வித தகவல்களும் இல்லை.
பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்ட 23 பேரில் 16 பேருக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் ஊதிய பேரேடு பதிவுகளில் எவ்வித தகவல்களும் இல்லை. மீதமுள்ள ஏழு பேரின் மாதாந்த கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் 445,500 ரூபாவும் மூன்று பேருக்கு 498 லீற்றர் எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன (2015 ஜனவரி – 2019 நவம்பர்)
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த 58 மாதங்களில் 82 பேரை தன்னுடைய தனிப்பட்ட பணியாளர்களாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக நியமித்துள்ளார். குறித்த பணியாட் தொகுதியில் 26 சிரேஸ்ட ஆலோசகர்கள், 3 பணிப்பாளர் நாயகங்கள், 26 பணிப்பாளர்கள், 18 ஒருங்கிணைப்புச் செயலாளர்கள், 8 மாவட்ட பணிப்பாளர்கள் மற்றும் ஒரு தனிப்பட்ட செயலாளர் ஆகியோர் உள்ளடங்குவர்.
ஒருங்கிணைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட 18 பேரில் 17 பேருக்கு மாதாந்த கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் 11 இலட்சம் ரூபாவும் 3136 லீற்றருக்கான எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் எவ்வித ஆவணங்களும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட 11 பேருக்கான கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் ஊதிய பேரேடு பதிவுகளில் எவ்வித தகவல்களும் இல்லை. மீதமுள்ள 15 பேருக்கு மாதாந்த கொடுப்பனவுகளுக்கு மாத்திரம் 14.88 இலட்சம் ரூபாவும் 1580 லீற்றருக்கான எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது. மூன்று பணிப்பாளர் நாயகங்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகளுக்காக 273,197 ரூபாவும் 480 லீற்றருக்கான எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது.
பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்ட ஐந்து பேருக்கான கொடுப்பனவு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் ஊதிய பேரேடு பதிவுகளில் எவ்வித தகவல்களும் இல்லை. மீதமுள்ள 21 பேருக்கு மாதாந்த கொடுப்பனவுகளுக்கு மாத்திரம் 19.93 இலட்சம் ரூபாவும் 2940 லீற்றருக்கான எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்ட எட்டு பேருக்கான மாதாந்த கொடுப்பனவுகளுக்கு மாத்திரம் 713,520 இலட்சம் ரூபாவும் 1520 லீற்றருக்கான எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச (2010 ஜனவரி – 2015 ஜனவரி)
மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த 60 மாதங்களில் 157 பேரை தன்னுடைய தனிப்பட்ட பணியாளர்களாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக நியமித்துள்ளார். குறித்த பணியாட் தொகுதியில் 82 ஆலோசகர்கள், 3 பணிப்பாளர் நாயகங்கள், 38 பணிப்பாளர்கள், 33 ஒருங்கிணைப்புச் செயலாளர்கள் மற்றும் ஒரு தனிப்பட்ட செயலாளர் ஆகியோர் உள்ளடங்குவர்.
ஒருங்கிணைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட 33 பேரில் 13 பேருக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை. ஏனைய 20 பேருக்கு மாதாந்த கொடுப்பனவுகளுக்கு மாத்திரம் 717,750 ரூபாவும் 2224 லீற்றருக்கான எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளருக்கு 35 ஆயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவும் 320 லீற்றர் எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்பட்டது.
ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட 82 பேரில் 43 பேருக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை. ஏனைய 39 பேருக்கு மாதாந்த கொடுப்பனவுகளுக்கு மாத்திரம் 20.91 இலட்சம் ரூபாவும் 4010 லீற்றருக்கான எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது.
பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட மூவரில் இருவருக்கு மாதாந்த கொடுப்பனவுகளுக்கு மாத்திரம் 128,000 ரூபாவும் 340 லீற்றருக்கான எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது.
பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்ட 38 பேரில் 14 பேருக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை. ஏனைய 24 பேருக்கு மாதாந்த கொடுப்பனவுகளுக்கு மாத்திரம் 13.08 இலட்சம் ரூபாவும் 2750 லீற்றருக்கான எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் ஒவ்வொரு ஜனாதிபதிகளும் தங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் தேர்தல் காலங்களில் தங்களுக்கு உதவியவர்களை எவ்வித அடிப்படைத் தகுதிகளும் இன்றி தங்களுடைய தனிப்பட்ட பணியாட்குழுவில் இணைத்து அவர்களுக்கான சலுகைகளை வழங்கியதன் மூலம் பொது நிதி பாரியளவில் செலவு செய்யப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.
இலங்கை அரசாங்கத்துக்கு சுமையை ஏற்படுத்தியுள்ள காரணங்களில் இவ்வாறான நியமனங்களும் உள்ளடங்கும். கடந்த காலங்களில் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்கள் இவ்வாறு ஜனாதிபதியின் பணியாட்குழுவில் இணைக்கப்படுவது அதிகார துஸ்பிரயோகமாகவே கருதமுடியும். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இருக்கும் சிறப்புரிமைகளை நீக்குவது தொடர்பில் கவனம் செலுத்தும் அரசாங்கம், ஜனாதிபதிகள் தங்களுடைய பதவிகாலத்தில் அனுபவிக்கும் சிறப்புரிமைகளிலும் கட்டுப்பாடுகளை விதிக்க முன்வர வேண்டும்.

Recent Comments