News

அம்பலாந்தோட்டையில் மணல் கொள்ளைக்கு பின்னால் இருப்பது யார்?

By In

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி

இன்று அதிகம் பேசப்படும் விடயம் இலஞ்சம், ஊழல், வீண்விரயம் இல்லாத நாட்டை உருவாக்குவது என்பதாகும். மக்களும் தற்போதைய அரசாங்கமும் அதற்கு இணங்கிச் சென்றுள்ளனர். இருப்பினும், இலஞ்சம், ஊழல், வீண்விரயம் ஆகியவற்றுக்கு அரசியல்வாதிகள் மட்டும் காரணம் அல்ல. பெரும்பாலான அரச அலுவலர்களின் சட்டவிரோத மற்றும் ஊழல் நடவடிக்கைகளும் அதற்கு ஒரு காரணமாகும்.

இலங்கையில் சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தும் பிரதான துறை புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கத் துறையாகும். சட்டவிரோதமாக அல்லது அனுமதி நிபந்தனைகளை மீறி மேற்கொள்ளப்படும் அகழ்வுகள் அதற்கு வலுவான காரணமாக அமைந்துவிட்டன. சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள பல்வேறு சலுகைகளுக்குக் கடமைப்பட்ட அரச அலுவலர்கள் மற்றும் பொலிசாரே சுற்றுச்சூழல் பாதிப்புக்கு முழுமையான பொறுப்புடையவர்களாவர். இந்த புலனாய்வு பதிவானது அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வு மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சித்த பொதுச் சம்பளம் பெறும் அரச உத்தியோகத்தர்களின் ஊழல் நடவடிக்கையை வெளிப்படுத்துகிறது.

கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு

கடந்த காலங்களில் அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு மற்றும் கடத்தல் இடம்பெற்றதுடன், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம், பொலிஸார் மற்றும் ஏனைய பொறுப்பான அரச நிறுவனங்கள் சட்டத்தை அமுல்படுத்தாததால் நிலைமை மேலும் மோசமாகி வந்தது. இதனால் தற்போது அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அம்பலாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வலேவத்தை, மாமடல, ஜன்சகம போன்ற பிரதேசங்களில் பாரிய சுற்றுச்சூழல் சேதத்தின் பின்னர் எஞ்சியுள்ளவை எல்லையில்லாத பாரிய குழிகள் மட்டுமேயாகும். புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் ஊழல் அலுவலர்களின் செயற்பாடுகளும், அரசியல்வாதிகள் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளின் அனுமானங்களும் இத்தகைய சூழ்நிலையை உருவாக்குவதற்கு பெரும்பாலும் காரணமாகின்றன.

சுற்றிவளைக்கப்பட்ட ஓர் இடம்

சுற்றிவளைக்கப்பட்ட இடம்

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் திகதி வலான ஊழல் தடுப்புப் பிரிவின் அலுவலர்கள் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலர்களுடன் இணைந்து அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்காலை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட ஜன்சகம கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட தெபரகஸ்முல்லையில் வயல்வெளி ஒன்றில் இயங்கி வந்த சட்டவிரோத மணல் அகழ்வு நிலையத்தில் நடவடிக்கை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட பின்னர் பதினைந்து பேருக்கு எதிராக தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மணல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட பேக்ஹோ இயந்திரங்கள், அகழ்வு இயந்திரம் மற்றும் கன்டர் வாகனம் உள்ளிட்ட 10 உபகரணங்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அம்பலாந்தோட்டை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டன. எவ்வாறாயினும், குறித்த உபகரணங்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து, புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம், வலான ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் தங்காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

உபகரணங்களை விடுவித்தல்

எங்களது கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், வலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் 10.07.2023 திகதியிடப்பட்ட ref:ma/du/pra/a/stha/out/1108/2023 இலக்க கடிதத்தின் பிரகாரம் சந்தேக நபர்களுக்கு எதிராக தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்ததுடன் உபகரணங்கள் கையகப்படுத்தப்பட்டதும், வழக்குகள் முறையே 725 – 728 மற்றும் 733 – 740 வரை பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அம்பலாந்தோட்டை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த உபகரணங்கள் உயர் பொலிஸ் அதிகாரியின் தலையீட்டினால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

சமத்துவமற்ற பொலீஸ் சட்டம்

எவ்வாறாயினும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுப்பப்பட்ட தகவலுக்கான எங்களது கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, அப்போதைய தங்காலை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான திரு. கே.பி.கீர்த்திரத்னவால் கையொப்பமிடப்பட்ட 08.07.2023 ஆம் திகதியிடப்பட்ட ref: SSP/TAN/S/204/2023 இலக்க கடிதத்தில், விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் இன்னமும் முடிவடையவில்லை என்பதால் தகவல் சட்டத்தின் 5 ஆம் சரத்தின் கீழ் தகவல்கள் வழங்க மறுக்கப்பட்டது. பின்னர், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்யப்பட்டதையடுத்து, 11.08.2023 ஆம் திகதியிட்ட ref: SSP/TAN/S/204/2022 ஆம் இலக்க கடிதத்தின் கீழ்  கொடுக்கப்பட்ட தகவல்கள், சந்தேக நபர்கள் 20.07.2023 அன்று நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டதை வெளிப்படுத்தியது. அங்கு மீண்டும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முழுமையான தகவல்களை அளிக்கவில்லை. அதன்பிறகு, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவால் 23.11.2023 திகதியிடப்பட்ட 825/2023 ஆம் இலக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அதற்கு பதிலளித்த தகவலின்படி பதினெட்டு தொடரிலக்கம் வரை நீதிமன்ற காண்பித்தல் பொருள் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும், ஒவ்வொரு நீதிமன்ற காண்பித்தல் பொருள் பற்றுச்சீட்டுகளும் 725/23 முதல் 742/23 வரை வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், ஒரு சந்தேக நபருக்கும் நீதிமன்ற காண்பித்தல் பொருள் பற்றுச்சீட்டு இல:740/23 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பேக்ஹோ இயந்திரத்திற்கும் எதிராகவே நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 

பொலிசாரின் விளக்கம்

14 சந்தேகநபர்கள் மற்றும் ஏனைய உபகரணங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் தொடர்பில் தங்காலை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவிக்கையில், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளரான (சட்டம்) திருமதி. எம்.எஸ்.கே பெர்னாண்டோ ஐந்து அம்சங்களின் கீழ் விசாரணை நடத்துமாறு தங்காலை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார். 14 சந்தேக நபர்கள் அந்த ஐந்து விடயங்களின் கீழ் உள்ளடக்கப்படவில்லை என்பதுடன் அந்த உண்மை புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு 05.04.202 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு, 06.04.2023 ஆம் திகதியிடப்பட்ட  பதில் பணிப்பாளர் நாயகம்  எம்.எம்.ஜே.ஜி அஜித்பேம கையெழுத்திட்ட  LD/POLICE/28/5/120 இலக்க கடிதத்தில் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் இல்லாத பட்சத்தில் உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் பொருட்களை விடுவிப்பதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்ததுடன், அதனடிப்படையில் குறித்த இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தற்போதைய பணிப்பாளர் நாயகத்திடம் வினவியபோது, ​​திரு. எச்.எம்.ஆர்.பிரேமசிறி கூறுகையில், காண்பித்தல் பொருட்களை அல்லது நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக காவலில் உள்ள நபர்களை விடுவிப்பதற்காகவோ கடிதங்களை வழங்க முடியாது என குறிப்பிட்டார். மேலும், மணல் அகழ்வில் ஈடுபடும் போது தடுத்து வைக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் இயந்திரங்களை நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்தாமல் விசாரணைக்குப் பிறகு பயனற்றது என்பது இது சட்டரீதியான நடைமுறையைத் தவிர்க்கும் செயலாகத் தெரிகிறது.

குற்றவாளிகளுக்கு விசேட நடத்துகை

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக உள்ளூர் பொலிஸாரும், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அலுவலர்களும் சட்ட நடவடிக்கை எடுக்காத பின்னணியில், இந்த சுற்றிவளைப்பை வலான ஊழல் தடுப்பு பிரிவின் 23 அலுவலர்கள் மற்றும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அலுவலர்கள் இருவர் இணைந்து மணல் அகழ்வு தளத்தில் ரூபா. 20250/- பொது நிதியை செலவிட்டு மேற்கொண்டனர். சுற்றிவளைப்பின் பின்னர், தனிநபர்கள் மற்றும் நீதிமன்றக் காண்பித்தல் பொருட்கள் 2009 ஆம் ஆண்டின் 66 ஆம் வாசக இல: 63(1)(a) மூலம் திருத்தப்பட்ட 1992 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின் கீழ் அம்பலாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் அது தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்வது பொலிசாரின் சட்டப்பொறுப்பாகும். அந்த தனிநபர்கள் 27.03.2023 திங்கட்கிழமை காவலில் வைக்கப்பட்டதுடன், அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்திருக்கலாம், ஆனால் பொலீசார் அவ்வாறு செய்யவில்லை. மற்ற குடிமக்களிடம் இல்லாத இரக்கத்துடன் கைது செய்யப்பட்டவர்கள் மீது மிகுந்த கருணை காட்டுவதுடன் சட்டத்தை அமுல்படுத்தவும் பொலிசார் தயங்குவது போல் தெரிகின்றது.

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்துடன் கடிதங்களை பரிமாறிக்கொண்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு சந்தேக நபர்களையும் நீதிமன்றக் காண்பித்தல் பொருட்களையும் விடுவிப்பது சட்டவிரோதமான விடுதலை என்பது சட்டத்தை மதிக்கும் எந்த அதிகாரிக்கும் புரியும். தங்காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் கூறியது போல், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அதே பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் இந்தச் சுற்றிவளைப்பு தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரினால், அது திருடனைக் கண்டுபிடிக்குமாறு திருடனின் தாயைக் கேட்பது போன்றதாகும்.

மேலும், 11.07.2023 ஆம் திகதியிட்ட RTI/2023/075 ஆம் இலக்க கடிதத்தின்படி புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அளித்த தகவலின்படி, 2023 மார்ச் 27 அன்று சோதனையின் போது கைது செய்யப்பட்ட 15 நபர்கள் மற்றும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் 2009ம் ஆண்டின் 66ம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்ட 1992ம் ஆண்டின் 33ம் இலக்க சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின் 63(1)(a)ம் வாசகத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்புடைய பிரிவானது உரிமம் இல்லாமல் கனிமங்களை ஆராய்தல், அவற்றை அகழ்தல் அல்லது பதனிடுதல், கொண்டுசெல்லல், வர்த்தகம் அல்லது ஏற்றுமதி செய்பவர்களை குற்றம் புரிந்த குற்றவாளிகள் என்பதுடன் ஒரு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த பிறகு ரூபா. 500,000/- அபராதம் விதிக்கப்படுவதுடன் இரண்டாவது அல்லது கடுமையான குற்றத்திற்கு ஒரு மில்லியன் ரூபாய்க்கு மிகையாகாமல் அபராதம் அல்லது ஒரு வருடத்திற்கு மிகையாகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படும் என விபரிக்கின்றது.

முரண்பட்ட தகவல்

தங்காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் அவ்வாறு பதிலளித்த போதிலும், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் இந்த சம்பவம் தொடர்பாக 11.07.2023ம் திகதியிடப்பட்ட ref: RTI/2023/75 ஆம் இலக்க கடிதம் மூலம் அளித்த தகவலின்படி கைதுசெய்யும் அதிகாரம் பொலிசாரிடமே உள்ளதுடன் தொடர்புடைய சட்டத்தின் பிரகாரம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது பொலிசார் தான் என்பதை வெளிப்படுத்துகிறது. புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை பெற்றுள்ளதாகவும் அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட உள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கும் போது, ​​15.09.2023 அன்று செய்யப்பட்ட கோரிக்கைக்கு பணியகம் தகவல் வழங்காமையால், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிடம் மேன்முறையீடு செய்யப்பட்டது. ஆணைக்குழுவானது மேன்முறையீட்டு இல: 1373/2023 இன் கீழ் அறிவிப்பை வெளியிட்ட பிறகு, புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் 28.02.2024 திகதியிடப்பட்ட RTI/2023/125 ஆம் இலக்க கடிதம் மூலமாக தகவலை வழங்கியதுடன், இது பணியகம் சட்டமா அதிபர் ஜெனரல் திணைக்களத்திடம் 23.10.2023ம் திகதியிடப்பட் LD/ENFU/OP/08/23/1/78 ஆம் இலக்க கடிதம் மூலம் அறிவுறுத்தல்களை கோரியுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. அந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக, சட்டமா அதிபர் திணைக்களம் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு 23.10.2023 ஆம் திகதியிட்ட C/97/23/GS&MBம் இலக்க கடிதம் மூலமாக மூன்று அங்கீகரிக்கப்படாத அகழ்வு தளங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த கடிதத்தின் பிரதிகள் அம்பலாந்தோட்டை பொலிஸாருக்கும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

சட்டமா அதிபருக்கு மேல்நிலையில் உள்ளவர் யார்?

சட்டமா அதிபர் வழங்கிய அறிவுறுத்தல்கள் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கையை தெளிவாக வரையறுக்கின்றன. தண்டனை சட்டக்கோவையின் 136(1)(ஆ) பிரிவின் கீழ், அரச அலுவலர் அல்லது சமாதான அலுவலர் ஒருவர் நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்து குற்றவியல் வழக்கை ஆரம்பிக்கலாம். மேலும், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின் 15 வது பிரிவின் கீழ், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தில் உள்ள அனைத்து அலுவலர்களும் தண்டனை கோவை கட்டளைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளுக்காக அரச அலுவலர்கள் என வரையறுக்கப்படுகிறார்கள். மேலும் 2009 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்தப்பட்ட சட்டத்தின் பிரிவு இல 63 (C) இன் கீழ், பணியகத்தின் அனைத்து அலுவலர்களும் தண்டனை கோவை கட்டளைச் சட்டத்தின் நோக்கங்களுக்காக சமாதான அலுவலர்களாக உறுதிப்படுத்தப்படுகிறார்கள்.

சட்டமா அதிபர் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை பெயரிட்டுள்ளதுடன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் எதிராக ஆரம்பிக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து தனித்தனியான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். மேலும், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலர், 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க தண்டனைச் சட்ட கோவையின் 136(1)(ஆ) ஏற்பாடுகளின்படி, உரிய நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளித்து சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களமானது உரிய சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து அரச உத்தியோகத்தர்களை தமது கடமையை நிறைவேற்றுமாறு வழிப்படுத்தவே இவ்வாறு வலியுறுத்தியுள்ளது என்பது தெளிவாகின்றது. ஆனால் இங்கு நடந்திருப்பது புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகமும், பொலிசாரும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியப்பாடு இழக்கப்படும் வரை உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் தங்களது பொறுப்பைச் சரியாக நிறைவேற்றாமல் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. சட்டத்தை அமுல்படுத்துவதற்கான தெளிவான சாத்தியக்கூறுகள் இருக்கும் போது அதனை ஒன்றுமற்றதாக மாற்றக்கூடிய உயர் அதிகாரி யார்? அவர் சட்டத்தை அமுல்படுத்தாமைக்காக இந்த மணல் கொள்ளைக்கு பின்னால் இருப்பது யார்? அதை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவது சட்டத்தை மதிக்கும் அரச அலுவலர்களின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

சட்டமா அதிபர் தனது அறிவுறுத்தல்களை வழங்கியதை அடுத்து, புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் 08.11.2023 ஆம் திகதியிட்ட LD/ENT/Leters/Police/02/10 இலக்க கடிதத்தை அம்பலாந்தோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு சட்டமா அதிபர் இந்த சுற்றிவளைப்பு தொடர்பாக சட்ட நடவடிக்கையை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார், எனவே பொலிஸ் விசாரணை குறிப்புகள் மற்றும் சம்பவம் தொடர்பான பிரித்தெடுப்புகள் ஆகியன மேலதிக நடவடிக்கைகளுக்காக பணியகத்திற்கு தேவை என்றும் அவற்றின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்குமாறும் கோரி அனுப்பியுள்ளது.

14 நபர்கள் மற்றும் 9 இயந்திரங்களுக்கு எதுவித வழக்குகளும் இல்லை

சட்டமா அதிபரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும், தங்காலை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான திரு. சிசிர பேத்த தந்திரி அவர்களால் கையொப்பமிடப்பட்ட 01.11.2024ம் திகதியிடப்பட்ட SSP/TAN/S/RTI/08/2024ம் இலக்க கடிதத்தின் மூலம் சம்பவத்துடன் தொடர்புடைய 14 நபர்கள் மற்றும் ஒன்பது இயந்திரங்களுக்கு எதிராக 01.11.2024 வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அந்தக் கடிதம் மேலும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக பணிப்பாளரால் அனுப்பப்பட்ட 06.04.2023ம் திகதியிடப்பட்ட LD/POLICE/28/5/120 ஆம் இலக்க கடிதத்தில் சுற்றிவளைப்பின் போது அந்த இயந்திரங்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படவில்லை என்பது கண்டறியப்பட்டதாகவும் அதனால் விடுவிக்கப்பட்டதாகவும் கூறுகிறது. இந்த முரண்பாடான அறிக்கையானது 24.04.2024 ஆம் திகதியிடப்பட்ட LD/ENFU/OP/08/23/1/78ம் இலக்க கடிதம் மூலமாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் மீண்டும் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரியிருக்கும் விடயத்தால் சுட்டிக்காட்டப்படுகிறது. புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு தேவையான பொலிஸாரின் விசாரணையின் தொடர்புடைய குறிப்புகள் மற்றும் பிரித்தெடுப்புக்களை சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பலாந்தோட்டை பொலிஸார் அனுப்பி வைத்துள்ளதாகவும் ஆனால் இதுவரை புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக த்திற்கு இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இரகசிய தகவல் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த சந்தேக நபர்களும் உபகரணங்களும் குதிரை தப்பிச் சென்ற பிறகு தொழுவத்தை மூடுவதற்கான முயற்சியாகவே தோன்றுகிறது.

சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அலுவலர்கள் அளித்த அறிக்கைகளில் சிக்கல்கள் உள்ளதா என்ற வினா எழுப்பப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் சட்ட அமுலாக்கத்தை தாமதப்படுத்தும் தந்திரோபாயத்தை சில அரச அலுவலர்கள் கடைப்பிடிக்கின்றனர். இதன் விளைவாக, கால அவகாசம் முடிவதால், சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு இழக்கப்படுகிறது. ஊழலுக்கு எதிரான தற்போதைய அரசாங்கம், அந்தந்த நிறுவனம் ஏன், எவ்வாறான சலுகைகளுக்காக சட்ட நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கின்றன என்பதில் கடுமையாக கவனம் செலுத்தி முழுமையாக ஆராய வேண்டும். மேலும், இது குறித்து தகவல் கோரி புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்திடம் 01.10.2024 அன்று கோரிக்கை வைக்கப்பட்டு 04.11.2024 வரை எதுவிதமான பதிலும் இல்லை. 

இந்த விவகாரம் குறித்து தற்போதைய புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கேட்டபோது, ​​“ஏற்கனவே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நான் நினைத்தேன். இப்போது வழக்கு போட வாய்ப்பு இருக்கிறதா? என்பதே ஒரே விடயமாகும், ஆனால் நான் அதை விசாரிப்பேன் என்றார்.

பொலிஸ் அதிகாரிகளும், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் அலுவலர்களும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியாமல், குறிப்பாக நாட்டில் சட்டத்தின் ஆட்சியில் உயர்ந்த நிறுவனமான சட்டமா அதிபர் திணைக்களத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளனர். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையையும் தகர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை அவசியம் என்பது மேலோங்கி உள்ளதுடன், அவ்வாறு விசாரணை நடாத்தினால் திருடனை தாயிடம் கேட்பது போல் இல்லாமல் முறையான விசாரணை குழுவினரால் செய்யப்பட வேண்டும். 

News

ஊழியர்களின் நலனுக்காக இடமாற்றப்படும் நோர்வூட் பிரதேச செயலகம்

க.பிரசன்னா நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்க வேண்டுமென கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 10 பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான…

By In
News

தேர்தல் சட்டத்தை மீறிய அரச அலுவலர்களுக்கு தண்டனையில்லையா?

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இலங்கை ஜனநாயக பாரம்பரியத்தின் நீண்டகால வரலாற்றை கொண்டுள்ள நாடாகும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் ஜனநாயக ஆட்சி முறையின் அடித்தளமாகும். அதனைப் பாதுகாப்பதற்கும்,…

By In
News

இலங்கையில் பிறப்புகள் குறைவடைவதற்கும் இறப்புகள் அதிகரிப்பதற்கும் பின்னணியிலுள்ள இரகசியம் என்ன?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிக் கொணரப்பட்ட தரவுகள் முகமது ஆசிக் குடித்தொகை வளர்ச்சி பற்றிய தகவல் மற்றும் தரவுகளை குடித்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில்…

By In
News

நாட்டில் ஊழல் மற்றும் மோசடி நீங்கிவிட்டதா?

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த 52 வழக்குகள் ‘திரும்பப் பெறப்பட்டன’! -ஜனக போகும்புர ஒரு நாடு நிலையான வளர்ச்சியை நோக்கி நகர்வதற்கு, ஊழல் மற்றும் மோசடி…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *