News

அபிவிருத்திக்காக காத்திருக்கும் யட்டிநுவர பிரதேச சபைக்குட்பட்ட மக்கள்!

By In

மகேந்திர ரந்தெனிய

யட்டிநுவர தேர்தல் பிரிவுக்குட்பட்ட எம்பில்மீகம வடக்கு, பாரம்மனே, ரண்டிபொல ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் ஒரு பகுதி மக்கள் கொழும்பு நெடுஞ்சாலை வீதியுடன் தங்களது வீடுகளை இணைப்பதற்கு வீதி இல்லாததால் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். 

இவர்களது வீடுகளில் இருந்து பிரதான வீதிக்கான தூரம் அண்ணளவாக 800 மீற்றர்களாக இருந்தாலும், நானுஓயா அல்லது குடோ ஓயா நீரோடை மற்றும் புகையிரத பாதை என்பன வீதி அமைப்பதற்கு இடையூறாக உள்ளன. நீரோடையை கடப்பதற்காக அரச உதவியுடன் இரண்டு பாலங்கள் கட்டப்பட்டாலும், புகையிரத பாதையால் கிராமத்திற்குள் வாகனங்கள் செல்வது என்பது இன்னும் கனவாகவே உள்ளது. வீடுகள் கட்டுவதற்கான கற்கள், மணல், சீமெந்து, மரம் போன்ற கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வது அவர்களின் தோளில் சுமந்து செல்லும் ஒரு கைமுறைப் பணியாகிறது. 

மருத்துவ அவசர நிலைமைகள், திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் பிற நிகழ்வுகளுக்கு நடந்து செல்வது மட்டுமே அணுகுவதற்கான ஒரே வழியாகும். புகையிரத பாதைக்கு மேலாக வீதியினை அமைக்குமாறு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அஹங்கல்லையில் இடம்பெற்ற புகையிரத விபத்தை புகையிரத அதிகாரிகள் மேற்கோள்காட்டி, அவ்வாறான நிர்மாணப் பணிகளை அனுமதிக்கவில்லை. கோரிக்கையை நிராகரிப்பதற்கான மற்றொரு காரணம், சவாலான நிலப்பரப்பைக் கொண்ட அருகிலுள்ள மலையான யக்கா பாண்டில என்பதுடன் கடந்த காலங்களில் இங்கு புகையிரதம் தடம் புரண்டு விபத்துக்கள் நிகழ்ந்தன. இதனால், பாடசாலை சிறுவர்கள், முதியவர்கள், நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பலர் பெரும்பாலும் புகையிரதம் செல்லும் வரை காத்திருந்து புகையிரதப் பாதையில் சிறிது தூரம் நடந்து பாலத்திற்குச் சென்று பிரதான வீதியை அடைய வேண்டிய நிலை உள்ளது. 

ஆங்கிலேயர்கள் போக்குவரத்தை இலகுவாக்க புகையிரதப் பாதைகளை அமைத்ததுடன், அந்த செயற்பாட்டின் போது, கிராம மக்களுக்கு சொந்தமான நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தியது. இதனால், கிராம மக்கள் அந்த நிலங்களை கடப்பதற்கு புகையிரத திணைக்களத்திடம் அனுமதி பெற வேண்டும். மேலும், புகையிரதப் பாதைகளில் நடப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிபட்கும்புரவில் உள்ள நானுஓயா புகையிரத வாயிலுக்கு அருகில், ரணவன புராண விகாரைக்கு செல்லும் புதிதாக அமைக்கப்பட்ட வீதி உள்ளது. பாரம்மனே கிராமத்திற்கு புகையிரத பாதையை கடக்காமல் செல்வதற்கு அந்த பகுதியில் வீதி அமைக்க பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும், இந்த நிலப்பகுதியும் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமானது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு, புகையிரத ஒதுக்கிடங்களில் உள்ள நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அந்த வழியாக வீதி அமைப்பதற்கு முன்மொழியப்பட்டது. குடியிருப்புவாசிகள் நிதி சேகரித்து பிரதேச சபைக்கு செலுத்தி குத்தகையை பெற்றுக்கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட வீதியினூடாக பயணிகளை பயணிக்க அனுமதித்தனர்.

அம்பில்மீகம கிராம அபிவிருத்திச் சங்கம் மண்சரிவு அபாயம் உள்ள பகுதி உள்ளிட்ட பாரம்மனே வீதி, திஸ்ஸதெனிய வீதி ஆகியவற்றை அபிவிருத்தி செய்யவும், ரண்டிபொல வீதியில் தடுப்புச் சுவர் அமைக்கவும் முதன்மையாக கோரிக்கை விடுத்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, கிராமத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்தக் கோரிக்கைகளைப் புறக்கணித்து, சமூகத்தின் அவசரத் தேவைகளைப் புறக்கணித்து, அவர்களின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப சபை நிதியை ஒதுக்கியுள்ளனர்.

2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான எனது கோரிக்கையில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின்படி, யட்டிநுவர பிரதேச சபை 2020 ஆம் ஆண்டு யட்டிநுவர பிரதேச அபிவிருத்திக்காக 34.10 மில்லியன் ரூபாவும், 2021 ஆம் ஆண்டில் 50.09 மில்லியன் ரூபாவும், 2022 ஆம் ஆண்டில் 52 மில்லியன் ரூபாவும் மற்றும் 2023 ஆம் ஆண்டில் 65 மில்லியன் ரூபாவும் செலவிட்டுள்ளது. எனினும், பரம்மனே வீதியை அபிவிருத்தி செய்வதற்கு எந்தவொரு பிரதிநிதியும் சபைக்கு முன்மொழியவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். 

குறித்த வருடங்களில் யட்டிநுவர பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள் சபையின் நிதியை பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. 2020 ஆம் ஆண்டில், இப்பகுதிக்கு ரூ. 703,210 சபை நிதியில் இருந்து செலவிடப்பட்டதுடன், மேலதிகமாக சபிரிகம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. இதேபோல், 2021 இல் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக ரூபா. 1,980,000 ஒதுக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து 2022 இல் ரூபா 1,650,000 ஒதுக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டில், ரூ. 1,250,000 பெறுமதியான அபிவிருத்தி முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த முன்மொழிவுகள் எதிலும் பரம்மனே வீதி தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.

மாறாக, அவர்களுக்குத் தெரிந்தவர்களின் வீடுகளுக்குச் செல்லும் வீதிகள் அமைப்பது, வடிகால் அமைப்புகளை இணைப்பது, ஏற்கனவே உள்ள வீதிகளுக்குப் பக்கச்சுவர் கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது. சபைப் பிரதிநிதிகளிடம் 5% தரகுப்பணம் கோரியதாக சில பிரதேச சபை உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளதுடன், சில சந்தர்ப்பங்களில், செயற்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முன்பே ஒப்பந்தக்காரர்களிடம் தரகுப்பணம் கேட்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த அநீதிகளை முறைப்பாடளிப்பதற்கான சரியான வழிமுறை இல்லாததால், தனிநபர்கள் முறைப்பாடுகளைத் தெரிவிப்பதைத் தவிர்க்கின்றனர். ஏனெனில் இது நிறைவு செய்யப்பட்ட செயற்திட்டங்களுக்கான அவர்களின் கொடுப்பனவுகளையும் எதிர்கால செயற்திட்டங்களுக்கான வாய்ப்புகளை பெறுவதையும் பாதிக்கலாம்.

யட்டிநுவர பிரதேச சபை பிரிவு இலக்கம் 166 ஆம்பில்மீகம வடக்கில் திஸ்ஸதெனிய வீதி மற்றும் பரம்மனே வீதி ஆகிய இரண்டும் அமைந்துள்ளன. காணி உரிமையாளர் ஒருவரின் வீட்டிற்கு அருகில் செல்லும் திஸ்ஸதெனிய வீதியின் ஒரு பகுதி ஆரம்பத்தில் 6 அடி அகலமாக இருந்தது. இதனை 10 அடியாக விரிவுபடுத்துமாறு சபை கோரிக்கை விடுத்தபோது, அது தனியார் சொத்து என்பதால், நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இந்த விவகாரம் ஆளுநரின் கவனத்திற்கு சென்றதால், வீதியின் அந்தப் பகுதியைப் பயன்படுத்தும் குடியிருப்பாளர்களிடமிருந்து ரூ.450,000 இனை சேகரிப்பதில் அவர் தலையிட்டார். இந்த தொகையில் குறிப்பிட்ட வீட்டிற்கு ரூபா 58,000 செலவிடப்பட்டு, மக்கள் செலவில் அணை கட்டப்பட்டது. இறுதியில், வீதியின் அந்தப் பகுதி சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், ஒவ்வொரு கிராமத்திலும் கிராமப்புற வீதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ஒதுக்கிய 2 மில்லியன் ரூபாயிலிருந்து ரூ. 500,000 பெறப்பட்டது. இத்தொகையானது பிரதேச சபைக்கு வழங்கப்பட்டதுடன், அதனைப் பயன்படுத்தி வீதியின் ஒரு பகுதியை அபிவிருத்தி செய்திருந்தனர். ஒதுக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லாவிட்டால் சபையால் மேலதிகமாக  ரூ. 150,000 ஒதுக்குவதாகவும், ஆண்டு இறுதிக் கட்டுப்பாடுகள் காரணமாக அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை சபையால் நிதியை வழங்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் மீண்டும் நிதி சேகரித்து, வீதியின் மீதமுள்ள பகுதியை தாங்களாகவே சீமெந்திட்டனர். 

சுவாரஸ்யமாக, கிராமத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் வீதியின் எஞ்சிய பகுதியை அபிவிருத்தி செய்வதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஒரே வீதியில் பல வீடுகளை இணைக்கும் பக்க வீதியை மேம்படுத்துவதற்காக ரூ. 800,000 இனை ஒதுக்கியிருந்தார். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட கோரிக்கையின் பேரில், 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பாக வீதி அபிவிருத்திக்காக ரூபா 500,000 ஒதுக்கப்பட்டது.

இது சில குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்வதற்கு சரியான வீதி இல்லாத ஒரு கிராமத்தில், ஏற்கனவே வீதி வசதி உள்ள நபர்களுக்கு வாய்க்கால் மற்றும் பக்க சுவர்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமையை வெளிப்படுத்துகின்றது. 

எவ்வாறாயினும், உள்ளுராட்சி சபைகள் கலைக்கப்பட்டதன் மூலமாக உத்தியோகபூர்வ மட்டத்தில் மக்கள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரமனே வீதி அமைப்பதற்காக புகையிரத ஒதுக்கிடங்களை தனியாராக முதலீடு செய்வதற்கும் குத்தகைக்கு எடுப்பதற்கும் சமூகம் முன்முயற்சி எடுப்பது இதற்கு ஒரு முன்மாதிரியான உதாரணமாகும். புகையிரத திணைக்களத்திடம் தொடர்ச்சியான முறையீடுகள் மற்றும் பிரதேச சபைத் தலைவர் மற்றும் புகையிரத பொது முகாமையாளர் ஆகியோருக்கு இடையேயான கலந்துரையாடல்களின் மூலமாக, கிராம மக்களுக்கு 21.11.2022 திகதியிடப்பட்ட ஐந்தாண்டு குத்தகை ஒப்பந்தத்தின் மூலமாக வீதியை மேம்படுத்துவதற்கான சட்டபூர்வ உரிமை வழங்கப்பட்டது.  இந்த செயன்முறையை வசதிப்படுத்துவதற்காக, கிராம மக்கள் வரித் தொகையாக ரூ.13,000 இனை சபைக்கு செலுத்தியிருந்தனர்.

உள்ளுராட்சி சபைகள் கலைக்கப்பட்டதால், வீதி அபிவிருத்திக்கு நிதி பெறுவது சவாலானது. இதன் விளைவாக வீதியைப் பயன்படுத்தும் குடியிருப்புவாசிகள் ஒன்றிணைந்து, கூட்டாக சுமார் ரூ. 585,000 இனை முதலிட்டனர். புகையிரத பாதைக்கு இணையான தனியாரிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தி 900 மீற்றர் தூரத்திற்கு வீதி அமைத்தனர். ஆனால், இந்த வீதியில் உள்ள இரண்டு மின்விளக்குக் கம்பங்களை அகற்றுவதற்கு மின்சார சபையின் உதவி தேவைப்படுவதுடன் இதற்கான செலவினமாக ரூ. 150,000 மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த வீதி தற்போது சபையின் நியாயாதிக்கத்திற்குட்பட்ட பொது வீதியாக உள்ளதால், யட்டிநுவர பிரதேச சபையின் அனுசரணையுடன் இவ்விடயம் தொடர்பில் சபை செயலாளரின் தலையீட்டினை பெற்றுத்தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் யட்டிநுவர உள்ளுராட்சி மன்ற செயலாளரிடம் வினவியபோது, அபிவிருத்தி செய்யப்படாத வீதிகளை முன்னிலைப்படுத்தி, குடியிருப்புவாசிகளின் கையொப்பங்களுடன் முறையான கோரிக்கை முன்வைக்கப்பட்டால், அதனை ஆளுநருக்கு அனுப்பி, அந்த வீதிகளுக்கு நிதியுதவி பெற்றுத் தருவதாகத் தெரிவித்தார். பரமனே வீதி குறித்து, அப்பகுதி மக்கள் அதன் அபிவிருத்திக்காக 1 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டார். கோரிக்கைக்கு ஆளுனர் ஒப்புதல் அளித்ததும், அதற்கான தொகையை சபை வழங்கும் என உறுதியளித்தார்.

மேலும், அரச அதிகாரிகள் அரசியல் கட்சி சார்புகளால் பாதிக்கப்படுவதில்லை என்றும், பெரும்பான்மையினரின் கையொப்பமிடப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் சபையின் தொழில்நுட்ப அதிகாரிகள் கோரப்பட்ட வீதிகளின் மதிப்பீட்டை மேற்கொள்வார்கள் என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார். மதிப்பீட்டு அறிக்கையைத் தொடர்ந்து, வட்டார அபிவிருத்திக் குழுவின் பரிந்துரையைப் பெற்று, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்புவார்கள். ஒப்புதல் கிடைத்ததும், தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும்.

மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய அம்பில்மீகம வடக்கு பிரதேசத்தில் பரம்மனே வீதி மற்றும் திஸ்ஸதெனிய வீதி அபிவிருத்திகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா சுதந்திர மக்கள் கூட்டமைப்பிலிருந்து விலகியதன் காரணமாக யட்டிநுவர பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பதவி வெற்றிடமாக இருப்பதாக யட்டிநுவர பிரதேச சபையின் செயலாளர் திரு.சிசிரகுமார குறிப்பிட்டார். இதன் விளைவாக, கண்டி ஆளுநர் நாயகத்தின் முயற்சியின் கீழ் குழுவிற்கான முன்மொழிவுகள் சேகரிக்கப்பட்டு ஆளுநரால் அங்கீகரிக்கப்படும். 

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமை, பொதுமக்கள் முன்முயற்சி எடுத்து, முன்பு புறக்கணிக்கப்பட்ட பணிகளை மேற்கொள்வதனை  இயலுமாக்குகிறது. இதனால் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 45 உறுப்பினர்களுக்கு எரிபொருள், சம்பளம், தொலைபேசி கொடுப்பனவுகள் உள்ளிட்ட செலவினங்கள் மிச்சமாகியுள்ளன. 2023 வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமான ரூ. 65,000,000 இல் மாதந்தோறும் 878,000 சேமிக்கப்பட்டதுடன், இப்போது அதனை மற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். தமது நிதியைப் பயன்படுத்தி வீதிகளை அபிவிருத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள யட்டிநுவர பிரதேச மக்கள், மக்கள் பிரதிநிதிகளின் இருப்பை தாம் தவறவிடக்கூடாது என கருதுகின்றனர்.

News

ஜீவன சக்தி காப்புறுதி திட்டம் மூலம் ஏமாற்றப்பட்ட தோட்டத் தொழிலாளர்கள்

க. பிரசன்னா பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை, தனி வீடு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் காலங்காலமாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளமை…

By In
News

போலியான தகவல் வழங்கிய அஸ்வெசும பயனாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

க.பிரசன்னா கடந்த காலங்களில் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கும் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போலியான தகவல்களை வழங்கி தகுதியற்ற நபர்களும் அஸ்வெசும கொடுப்பனவை…

By In
News

 ரணில் விக்ரமசிங்கவின் ஓய்வூதியம்

– ஜனக சுரங்க இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் என பல்வேறு…

By In
News

18 வருடங்களாக நிர்மாணிக்கப்படும் மெரைன் டிரைவ் வீதி

க. பிரசன்னா கொழும்பு – காலி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறந்த வழி என அடையாளம் காணப்பட்ட கரையோர வீதியின் (மெரைன் டிரைவ்) ஆறு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *