ந.லோகதயாளன்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கழிவகற்றல் செயல்பாட்டிற்கு கடந்த வருடம் 7 கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்நோக்கப்படும் மிக முக்கிய நெருக்கடிகளில் ஒன்றே அங்கு சேரும் கழிவுகளை முறையாக முகாமை செய்வதாகும்.
இதற்கமைய, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கழிவுகளை அகற்றுவதில் காணப்படும் நிதிச் செலவினம் மற்றும் கழவகற்றும் பொறிமுறை, மாதாந்தம் சேரும் கழிவுகளின் அளவுகள் தொடர்பில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்கள் கோரப்பட்டன. இதற்கு வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ரி.சத்தியமூர்த்தி ஒப்பமிட்டு வழங்கிய பதிலில் இது தொடர்பான விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போது உக்கும் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், பிளாஸ்ரிக் கழிவுகள், கண்ணாடிப் போத்தல் கழிவுகளுடன் சத்திர சிகிச்சைக் கழிவுகள், கழிவு நீர் என்பன சேர்கின்றன.
உக்கக் கூடிய கழிவுகள், பொலித்தீன், கடதாசி மற்றும் பொதுவான கழிவுகள் மாநகர சபையினால் அகற்றப்படுகின்றன. கண்ணாடி போத்தல்கள், பிளாஸ்டிக் கொள்கலன்கள் மற்றும் இலத்திரனியல் கழிவுகள் என்பன ஒப்பந்தம் மூலம் தனியாரால் அகற்றப்படுகின்றன. செல்லப்படுகின்றன. தொற்றுக் கழிவுகளும் காலாவதியான மருந்துகளும் எரியூட்டப்படுகின்றன.
இவற்றில் மாதாந்தம் பொலித்தீன் மற்றும் கடதாசிக் கழிவுகள் தலா 10 தொடக்கம் 15 லோட்களும், கண்ணாடிப் போத்தல்கள் ஆயிரம் கிலோவும் சேர்வதோடு மருத்துவக் கழிவுகள் சுமார் 17 ஆயிரம் முதல் 19 ஆயிரம் கிலோ வரை சேர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கழிவகற்றலுக்கு ஏற்படும் செலவுகளுக்கான நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்படுகிறது. இதற்கமைய கடந்த இரண்டரை வருடங்களில் 14 கோடியே 35 இலட்சத்து 5 ஆயிரத்து 692 ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கழிவு நீர் உள்ளிட்ட இந்த கழிவுகளை அகற்ற யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு 4 கோடியே 50 லட்சம் ரூபாவும் 2023 ஆம் ஆண்டில் 7 கோடியே 5 ஆயிரத்து 692 ரூபாவும் செலவு ஏற்பட்டதோடு 2024 ஆம் ஆண்டின் யூன் மாதம் வரையான முதல் அரையாண்டில் 2 கோடி ரூபா செலவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட பதில் உறுதி செய்கின்றது.
இலங்கையின் 25 நிர்வாக மாவட்டங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணப்படும் அரச வைத்தியசாலைகளில் பிரதான வைத்தியசாலைக்கு கழிவு அகற்றல் செயல்பாட்டிற்கு மட்டும் ஆண்டு தோறும் ஏற்படும் நிதிச் செலவை வெளிப்படுத்துவதாக உள்ளது.
Recent Comments