News

அம்பாறை மாவட்ட சுனாமி வீட்டுத்திட்ட தகவல்களை வழங்கும் பொறுப்பு யாருடையது?

By In

க. பிரசன்னா

2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டதன் பின்னர் பல வெளிநாட்டு உதவிகளை அரசாங்கம் பெற்றுக்கொண்டது. இதன் தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டத்தில் நுரைச்சோலை மற்றும் மருதமுனை – மேற்குவட்டை பிரதேசத்திலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதி அரேபிய அரசாங்கத்தின் செரட்டி நிறுவனத்தினால் சுனாமி வீட்டுத்திட்டங்கள் அமைத்துக்கொடுக்கப்பட்டும் இன்றுவரையும் அவை பயனாளிகளிடம் கையளிக்கப்படமால் கைவிடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. இவ்வீட்டுத்திட்டங்கள் தொடர்பான தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் சுனாமி வீட்டுத்திட்டங்களுடன் தொடர்புடைய அக்கரைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் கல்முனை பிரதேச செயலகம் என்பவற்றுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் விண்ணப்பித்தும் ஒருசில தகவல்கள் வழங்கப்பட்டிருந்த போதும், மேலதிக தகவல்கள் அம்பாறை மாவட்ட செயலகத்திலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் வீட்டுத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை அம்பாறை மாவட்ட செயலகமோ, அக்கரைப்பற்று மற்றும் கல்முனை பிரதேச செயலகங்களோ முழுமையாக கொண்டிருக்கவில்லை அல்லது அவை தொடர்பான விபரங்களை வழங்குவதை மறுக்கின்றன என்றே கருத வேண்டியுள்ளது. இவ்வாறான நிலைமையினாலேயே சுனாமி வீட்டுத்திட்டமானது பூர்த்திசெய்யப்பட்டு பல வருடங்கள் கடக்கின்ற நிலையிலும் மக்களுக்கு கையளிக்கப்படாமல் தொடர்ந்தும் இழுபறியிலேயே இருந்து வருகின்றது.

குறிப்பாக வீட்டுத்திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்ட நிதி தொடர்பான விபரங்கள் எந்தவொரு அரச நிறுவனங்களிலும் இல்லையென்பது தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்தது. குறிப்பிட்ட வீட்டு கட்டுமானத்திற்கான செலவீனங்களுக்கு பொறுப்பான முகவர் யார் என்பதை தெளிவுபடுத்துமாறு அம்பாறை மாவட்ட செயலகத்துக்கு ஆணை வழங்கப்பட்டது. 

அதனடிப்படையில் இரண்டு சுனாமி வீட்டுத்திட்டங்களும் நிதி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டவுடன் ஆணைக்குழுவுக்கு வழங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நுரைச்சோலை சுனாமி 500 வீட்டுத்திட்டம்

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட நுரைச்சோலை பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதி அரேபியாவின் நன்கொடை நிதியத்தின் 552 மில்லியன் ரூபா நிதியுதவியில் சுனாமி வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இவ்வீட்டுத்திட்டத்துக்கான ஒப்பந்தம் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டு, வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சிடம் வழங்கப்பட்டது. சுமார் 40 ஏக்கர் காணியில் 500 வீடுகள் உட்பட பல்தேவை கட்டிடம், சந்தைக் கட்டிடம், ஆண்கள் பாடசாலை, பெண்கள் பாடசாலை, பள்ளிவாயல், வைத்தியசாலை, பஸ்தரிப்பு நிலையம், விளையாட்டு மைதானம் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினால் (18/2019) தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வீட்டுத்திட்டச் செயற்பாடுகள் நிறைவடையும் தருவாயில், நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தின் வீடுகள் முஸ்லிம் மக்களுக்கு மட்டும் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாதிக ஹெல உறுமயவினால் உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு தொடர்பில் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தலைமையில் வழங்கப்பட்ட தீர்ப்பில் நுரைச்சோலை வீடுகள் தனி இனமொன்றுக்கு வழங்கப்படக்கூடாது என்றும் அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய வகையில் வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென கூறப்பட்டிருந்தது. தற்போது தீர்ப்பு (178/2008) வழங்கப்பட்டு 12 வருடங்கள் கடக்கின்ற நிலையிலும் இன்னும் வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்படவில்லை. 

இந்த 500 வீடுகளை அம்பாறை மாவட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் முகமாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் காணிக் கச்சேரியொன்றும் நடத்தப்பட்டிருந்தது. இக்கச்சேரியில் 660 விண்ணப்பதாரிகள் கலந்து கொண்டிருந்தனர். தற்போதுவரை 303 முஸ்லிம் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும் இன்னும் வீடுகள் கையளிப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படவில்லை. நுரைச்சோலையிலுள்ள 500 வீடுகளில் 303 வீடுகள் முஸ்லிம்களுக்கும் மிகுதியாகவுள்ள 197 வீடுகள் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இவ்வீடுகளை பகிர்ந்தளித்தாலும் கூட பயனாளிகளால் உடனடியாக குடியேறமுடியாத நிலையில் மிகவும் மோசமாக சேதமடைந்த நிலையிலேயே வீடுகள் காடுமண்டிய நிலையில் காணப்படுகின்றன.

வீடுகளை பகிர்ந்தளிப்பதில் அரசாங்கத்தால் பின்பற்றப்பட்டுள்ள நடைமுறை மீது திருப்தி கொள்ளாத நிலை தொடர்வதாலேயே வீடுகளை பகிர்ந்தளிப்பதில் இன்னும் சிக்கல் நிலை நீடித்து வருகின்றது. தற்போதுள்ள வீட்டுத்திட்டங்களிலுள்ள கதவுகள் போன்ற பெறுமதியான பொருட்களும் களவாடப்பட்டுள்ளன. வீட்டுத்திட்டம் முழுக்க காடு வளர்ந்தள்ளது. வீடுகளில் வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் பாரிய புனரமைப்பு வேலைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதால் அதற்காக பாரியளவான நிதியினை ஒதுக்க வேண்டிய தேவையுள்ளது. அதற்கான பொறுப்பினை முன்னெடுப்பது யார்?

மருதமுனை 65 மீற்றர் வீட்டுத்திட்டம்

அதேவேளை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மருதமுனை மேட்டுவட்டை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட மருதமுனை 65 மீற்றர் வீட்டுத்திட்டத்தில் 178 வீடுகளில் 96 வீடுகளே இதுவரை பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 2006 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இவ்வீட்டுத்திட்டத்தின் 178 பயனாளிகளின் விபரங்கள் மாத்திரமே கல்முனை பிரதேச செயலகத்தில் காணப்படுவதாக (KM/DS/RTI/2019/1-165) தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை வீட்டுத்திட்டத்தின் செலவு விபரம் மற்றும் வீட்டுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள வசதிகள், விலைமனு கோரல் தொடர்பான விபரங்கள் எவையும் கல்முனை பிரதேச செயலகத்தில் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருதமுனையில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடுகளை அமைப்பதற்காக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலேயே காணிகளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மருதமுனை பிரதேசத்தில் காணிகள் இல்லாத நிலையில் மருதமுனை மேற்கு பகுதியிலுள்ள வயல் நிலங்களையே தேர்வு செய்ய வேண்டிய நிலை காணப்பட்டது. அப்போதைய கல்முனை பிரதேச செயலாளரான ஏ.எச்.எம்.அன்சாரினால் மருதமுனை மேட்டுவட்டை பகுதியிலுள்ள 33 ஏக்கர் விவசாய நிலமானது சுவீகரிக்கப்பட்டது. இவற்றில் 10 ஏக்கர் காணியில் வீட்டுத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

நிர்மாணிக்கப்பட்ட 178 வீடுகளில் 82 வீடுகள் இன்னும் பயனாளிகளிடம் கையளிக்கப்படாமல் இருக்கின்றன. இலங்கை அரசாங்கத்தினால் 10 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இவ்வீடுகள் 14 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் பாழடைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மிகுதியுள்ள வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குவதற்கு அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் கல்முனை பிரதேச செயலகம் என்பவற்றில் நேர்முகத்தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையிலும் இன்னும் வீடுகள் கையளிக்கப்படவில்லை. 

இவ்வீட்டுத்திட்டங்களின் மூலம் பெருமளவான நன்கொடை நிதியும் அரச நிதியும் விரயமாக்கப்பட்டுள்ளமையையே காணமுடிகின்றது. நுரைச்சோலை வீட்டுத்திட்டமானது ஒரு வீட்டுக்கு 35 இலட்சம் ரூபா அளவில் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவை இன்று பல இலட்சங்களை செலவு செய்து மீண்டும் புதுப்பிக்க வேண்டிய தேவையிலேயே காணப்படுகின்றது. இலங்கையில் சுனாமி இடம்பெற்று 15 வருடங்கள் கடந்த நிலையிலும் கிடைக்கப்பெற்ற வளங்கள் இன்னும் மக்களுக்கு சென்றடைவதில் இழுபறி நீடித்து வருகின்றமையானது பயனாளிகளின் உரிமைகளை மீறும் செயலாகவே கருதவேண்டியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர் சகல இன மக்களையும் உள்ளடக்கிய வகையிலான பயனாளிகளை தெரிவு செய்வதிலேயே இவ்வாறு இழுத்தடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருவேளை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படாமல் இருந்திருந்தால் வீட்டுத்திட்டமானது பயனாளிகளின் கைகளுக்குச் சென்றடைந்திருக்கும். ஆனால் அங்கு ஏனைய இனப் பயனாளிகள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்க மாட்டார்கள். 

நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டமானது, சுனாமியால் வீடுகளை இழந்த முஸ்லிம் மக்களுக்காக உருவாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் சுனாமியால் வீடுகளை இழந்த பல நூற்றுக்கணக்காண முஸ்லிம்களுக்கு இதுவரை வீடுகள் கிடைக்கப்பெறவில்லையெனவும் ஆனால் சுனாமியால் பாதிக்கப்பட்ட நான்கைந்து பெரும்பான்மையினத்தவர்களின் குடும்பத்தொகையினை விடவும் அதிகமான பெரும்பான்மையின குடும்பங்களுக்கும் அதேபோல தமிழ் மக்களுக்கும் போதுமான வீடுகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுவிட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. வீட்டுத்திட்டமானது அரச நிலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளதால் அரசியலமைப்பின்படி, பயனாளிகளின் அடிப்படை உரிமை, சுதந்திரம், மனசாட்சி மற்றும் மதம் என்பனவற்றுக்கு சட்டத்தின் மூலம் சமனான பாதுகாப்பை வழங்கவேண்டும் என நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் தீர்ப்பும் நடைமுறைக்கு வரவில்லை. பயனாளிகளுக்கு உரிய வகையில் வீடுகளும் சென்றடையவில்லை. தற்போது வீடுகளை அல்ல வெறும் சுவர்களை மாத்திரமே பயனாளிகளுக்கு கையளிக்க முடியும். அந்தளவுக்கு வீடுகள் பாழடைந்த நிலையில் இருப்பதனையே அவதானிக்க முடிகின்றது. 

News

ஊழியர்களின் நலனுக்காக இடமாற்றப்படும் நோர்வூட் பிரதேச செயலகம்

க.பிரசன்னா நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்க வேண்டுமென கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக 10 பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்கான…

By In
News

தேர்தல் சட்டத்தை மீறிய அரச அலுவலர்களுக்கு தண்டனையில்லையா?

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இலங்கை ஜனநாயக பாரம்பரியத்தின் நீண்டகால வரலாற்றை கொண்டுள்ள நாடாகும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் ஜனநாயக ஆட்சி முறையின் அடித்தளமாகும். அதனைப் பாதுகாப்பதற்கும்,…

By In
News

இலங்கையில் பிறப்புகள் குறைவடைவதற்கும் இறப்புகள் அதிகரிப்பதற்கும் பின்னணியிலுள்ள இரகசியம் என்ன?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிக் கொணரப்பட்ட தரவுகள் முகமது ஆசிக் குடித்தொகை வளர்ச்சி பற்றிய தகவல் மற்றும் தரவுகளை குடித்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பில்…

By In
News

அம்பலாந்தோட்டையில் மணல் கொள்ளைக்கு பின்னால் இருப்பது யார்?

ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி இன்று அதிகம் பேசப்படும் விடயம் இலஞ்சம், ஊழல், வீண்விரயம் இல்லாத நாட்டை உருவாக்குவது என்பதாகும். மக்களும் தற்போதைய அரசாங்கமும் அதற்கு இணங்கிச் சென்றுள்ளனர்….

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *