News

2016 – 2022 : வெளிநாடுகளில் 3742 இலங்கைத் தொழிலாளர்கள் மரணம்! 2602 பேரின் உடல்கள் நாட்டுக்கு வரவில்லை!

By In

க.பிரசன்னா

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளினால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை, வறுமை போன்ற பல்வேறு காரணங்களினால் சமீப காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இதனை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் நபர்களை சுற்றுலா விசாவில் அனுப்பி பணம் சம்பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஓர் அங்கமாகவே ஓமானுக்கு பணிப்பெண்களாக சென்ற பல இலங்கைப் பெண்கள் ஏலத்தில் விற்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

முகவர்கள் இவ்வாறு ஆட்களை அனுப்பி பணம் சம்பாதிப்பது ஒருபுறமிருக்க, அரசாங்கமும் அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்பவர்களை ஊக்குவித்து வருகின்றது.   தற்போது அரச திணைக்களங்களில் பணிபுரிபவர்களுக்கும் ஊதியமில்லா விடுமுறை வழங்கி வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 

எனினும் அரசாங்கம் அந்நியச் செலாவணியை இலக்கு வைத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்வதை ஊக்குவித்தாலும் மறுபுறும் அதன்மூலம் ஏற்படும் பாதகமான விளைவுகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருக்கவில்லை. ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு இல்லங்களில் தற்போது தங்கியுள்ள 77 இலங்கைப் பணிப்பெண்களில் 12 பேர் மாத்திரமே பணியகத்தில் பதிவு செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளமை இதனை உறுதிப்படுத்துகிறது.

கிட்டத்தட்ட 90 இலங்கையர்கள் சுற்றுலா விசாவில் ஓமானுக்கு வேலைவாய்ப்பினை பெற்று சென்று முகவர்களால் கைவிடப்பட்ட நிலையில் பாலியல் சேவைகளுக்காக கட்டாயப்படுத்தப்பட்டு ஏலத்தில் விற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஓமான் தூதரகத்தில் கடமையாற்றிய அதிகாரி ஒருவரும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பல்வேறு நாடுகளுக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்று பாதிக்கப்பட்ட நிலையில் தூதரகத்தினால் நடத்தப்படும் பாதுகாப்பு இல்லங்களில் 2016 – 2021 ஆம் ஆண்டுகளில் 69,845 பேர் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் விடுக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல் அதிகாரி பி.பி.வீரசேகர வழங்கியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

சுகவீனம், விசா காலம் நிறைவடைந்து மேலதிக காலம் தங்கியிருந்தமை, துன்புறுத்தல்கள் (பாலியல் மற்றும் உடல் ரீதியான), ஊதியம் செலுத்தப்படாமை, ஒப்பந்த மீறல் மற்றும் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டமை ஆகிய காரணங்களினால் இவர்கள் பாதுகாப்பு இல்லங்களில் தஞ்சமடைந்துள்ளனர். 

இவ்வாறு தூதரகங்களினால் நடத்தப்படும் பாதுகாப்பு இல்லங்களில் தஞ்சமடைந்த 326 பேர் 2017 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளதுடன் இதற்காக 22,956,592.9 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

இதில் 2017 ஆம் ஆண்டு 63 இலங்கையர்களை அழைத்து வருவதற்காக 2,182,624.83 ரூபாவும் 2018 இல் 22 பேரை அழைத்து வருவதற்கு 888,779.63 ரூபாவும் 2019 இல் 39 பேரை அழைத்து வருவதற்கு 2,168,097.79 ரூபாவும் 2020 இல் 74 பேரை அழைத்து வருவதற்கு 5,884,812.89 ரூபாவும் 2021 இல் 128 பேரை அழைத்து வர 11,832,277.77 ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்று மரணித்தவர்கள் தொடர்பான விபரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சின் தகவல் உத்தியோகத்தர், சட்ட அலுவலர் குமுதினி அபேகோன் வழங்கிய தகவல்களின் படி, 2016 – 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றவர்களில் 3742 பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று, உடல் நலக்குறைவு, விபத்து, தற்கொலை, கொலை மற்றும் ஏனைய காரணங்களின் அடிப்படையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணித்த 3742 பேரில் 1140 பேரின் உடல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள அதேவேளை, 2602 பேரின் உடல்கள் இன்னும் நாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை என்பதும் வேதனையான விடயமாகும்.

2016 ஆம் ஆண்டு 437 பேர் மரணித்துள்ளதுடன் 152 உடல்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் 173 உடல்கள் நாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.  2017 ஆம் ஆண்டு   மரணித்த 458 பேரில் 249 பேரின் உடல்களும்   2018 இல் மரணித்த 448 பேரில் 352 பேரின் உடல்களும் 2019 இல் மரணித்த 472 பேரில் 383 பேரின் உடல்களும் 2020 இல் மரணித்த 741 பேரில் 618 உடல்களும்  2021 இல் மரணித்த 797 பேரில் 675 பேரின் உடல்களும் 2022 இல் மரணித்த 389 பேரில் 173 உடல்களும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

2020 – 2022 ஆம் ஆண்டு வரை நிலவிய கொவிட் தொற்று காலப்பகுதியில் 415 பேர் வெளிநாடுகளில் பணிபுரிந்த நிலையில் இத் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். மேலும் 2016 – 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உடல்நலக்குறைவால் 2744 பேரும் விபத்துக்களினால் 327 பேரும் தற்கொலையால் 176 பேரும் கொலையால் 33 பேரும் ஏனைய காரணங்களினால் 47 பேரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈட்டினை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொண்டுள்ளது. இதன்படி 2010 – 2022 நவம்பர் வரையான காலப்பகுதியில் உயிரிழந்த நபர்களின் 1756 குடும்பங்களுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.     

இவற்றில் 2010 ஆம் ஆண்டு 201,000,000 ரூபாவும் 2011 இல் 155,000,000 ரூபாவும் 2012 இல் 169 குடும்பங்களுக்கு 171,000,000 ரூபாவும் 2013 இல் 171 குடும்பங்களுக்கு 200,000,000 ரூபாவும் 2014 இல் 187 குடும்பங்களுக்கு 181,796,142.99 ரூபாவும் 2015 இல் 143 குடும்பங்களுக்கு 209,691,863.60 ரூபாவும் 2016 இல் 194 குடும்பங்களுக்கு  346,660,177.09 ரூபாவும் 2017 இல் 209 குடும்பங்களுக்கு 371,179,908.18 ரூபாவும் 2018 இல் 182 குடும்பங்களுக்கு 418,685,868.26 ரூபாவும் 2019 இல் 163 குடும்பங்களுக்கு 394,713,468.46 ரூபாவும் 2020 இல் 107 குடும்பங்களுக்கு 247,035,111.48 ரூபாவும் 2021 இல் 138 குடும்பங்களுக்கு 277,439,174.22 ரூபாவும் 2022 நவம்பர் வரை 90 குடும்பங்களுக்கு 346,864,310.21 ரூபாவும் நட்டஈடாக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் தொழிலாளர்களின் நலன்கள் பேணப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். அத்துடன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ் பதிவு செய்யாத போலி முகவர்களின் மூலம் வெளிநாடு செல்வதன் அபாயங்கள் தொடர்பில் தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியமாகும்.

News

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு…

By In
News

நுவரெலியாவில் சட்டவிரோதமான கட்டுமானங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரமா?

ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக…

By In
News

தேசிய பாடசாலை தொடர்பான கட்டுக்கதையும் ஆசிரியர் வெற்றிடங்களும்

மகேந்திர ரந்தெனிய மூன்று வருடங்களாகக் கல்வி சீர்திருத்தக் குழுக்களுக்குப் பல கோடிக்கணக்கில் பணம் செலவழித்தும் எந்தப் பலனும் கிடைக்கப்பெறவில்லை என்பதை ஊடகங்கள் அவ்வப்போது வெளிப்படுத்திவருகின்றதை  காணக்கூடியதாக உள்ளது….

By In
News

தொடரும் இலங்கை – இந்திய மீனவர் கைதுகள்!

க.பிரசன்னா இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்ட வரலாற்றைக் கொண்டது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட பின்னர் ஆரம்பமான பிரச்சினை, இப்போது சட்டவிரோத மீன்பிடி முறையினால் வேறு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *