News

11 வருடங்களாகியும் விடுவிக்கப்படாத சிலாவத்துறை மக்களின் காணிகள்

By In

க. பிரசன்னா

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் மக்களுடைய வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம், உட்கட்டமைப்பு, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம் போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. ஆனாலும் தற்போது 11 வருடங்களை கடந்திருக்கின்ற போதும் எவ்விதமான அபிவிருத்திகளும் மக்களுக்கு சென்றடையாமல் இருப்பது கவலை தரும் விடயமாகும். இவற்றில் பாதுகாப்பு படைகளினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவித்து கொள்வதற்கு மக்கள் மேற்கொண்டு வரும் பிரயத்தனங்கள் சொல்லிலடங்காதவை. இவற்றில் முக்கியமாக சிலாவத்துறை கடற்படை முகாம் அமைந்துள்ள 36 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரி 109 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த காலங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் காணிகளை இழந்தவர்களில் 12 குடும்பங்களுக்கு தலா 20 பேர்ச்சஸ் வீதம் அரசகாணி சிலாவத்துறையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் நான்கு குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டிருப்பதாகவும் கடற்படை முகாமினை அகற்றும் திட்டம் இல்லையெனவும் கடற்படை பேச்சாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

சிலாவத்துறை பகுதியிலிருந்து 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்களே தங்களுடைய பூர்வீக நிலங்களுக்காக போராடி வந்திருந்தனர். இந்நிலையில் முசலிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட  சிலாவத்துறை கிராம மக்களுக்குச் சொந்தமான 36 ஏக்கர் காணியில் (சிலாவத்துறை மக்களின் தகவல்களின் அடிப்படையில் காணியின் அளவு) கடற்படை முகாம் அமைக்கப்படடுள்ளமை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி (MU/DS/RTI/2019) சில விடயங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. தற்போது மக்களுடைய 34 ஏக்கர் 88 பேர்ச் இல் (முசலி பிரதேச செயலகம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில்) 6 ஏக்கர் 88 பேர்ச் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 36 ஏக்கர் காணியினை விடுவிக்காமையினால் 223 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த 223 குடும்பங்களுக்கும் காணி உறுதிகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் புதிய குடியேற்றத்திட்டம் 56 மற்றும் 96 வீட்டுத்திட்டங்கள் சிலாவத்துறை போன்றவற்றில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 

2019 ஆம் ஆண்டு புள்ளிவிபரத் தகவல்களின்படி 651 குடும்பங்களைச் சேர்ந்த 2354 குடும்ப அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். சிலாவத்துறை கிராம மக்களின் காணியில் கடற்படை முகாம் அமைப்பது தொடர்பாக அல்லது காணி சுவீகரிக்கப்பட்டது தொடர்பாக காணி உரிமையாளர்களுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை. தற்போது இக்காணியை மீட்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் 2019.03.06 ஆம் திகதி அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின்படி 2019.03.13 ஆம் திகதி கடிதம் மூலம் கடற்படை முகாமை அகற்றும்படி கோரி ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

1990 ஆம் ஆண்டில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். இக்காலப்பகுதியில் சிலாவத்துறையில் வாழ்ந்த சுமார் 220 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி வேறு இடங்களில் வசித்து வந்திருந்தனர். இந்நிலையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இவர்கள் 220 குடும்பங்களாக இடம்பெயர்ந்திருந்தாலும் சொந்த இடங்களுக்கு திரும்பும்போது 625 குடும்பங்களாக காணப்பட்டது. ஆனாலும் ஏற்கனவே இம்மக்கள் வசித்து வந்த 34 ஏக்கர் காணியில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அன்று தொடங்கிய காணி மீட்பு போராட்டமானது இன்று வரையும் எவ்விதமான முன்னேற்றங்களுமின்றிய நிலையில் தொடர்ந்து வருகின்றது. முன்னாள் பிரதமரின் வாக்குறுதிக்கமைவாக 6 ஏக்கர் காணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ள போதும் அவை சகல குடும்பங்களும் வாழ்வதென்பது இயலாத காரியமாகும். 

மொத்தமாக 34 ஏக்கர் காணி கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் 6 ஏக்கர் காணி பொதுமக்களின் பாவனைக்காக விடுவிக்கப்பட்டது. இரண்டு ஏக்கர் காணி பாதைகளுக்கு ஒதுக்கப்பட்ட பின்னர் 26 ஏக்கர் காணி எஞ்சியிருந்தது. இந்த 26 ஏக்கரில் 35 பேருக்கு வருடாந்த பெரிமிட், 18 பேருக்கு எல்.டி.ஓ (காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழானது), நான்கு பேருக்கு கிராண்டும் (நன்கொடை அல்லது அளிப்பு) 13 பேருக்கு உறுதியும் இருப்பதுடன் 12 பேர் காணிகளை அடாத்தாக தமக்குச் சொந்தமாக உபயோகப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசாரணையில் சிலாவத்துறையில் கடற்படையால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி தேசிய பாதுகாப்புக்கு அவசியமாகையால் விடுவிக்கப்படாது எனவும், அவற்றை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிலாவத்துறை கடற்படை முகாம் பொறுப்பதிகாரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இப்பிரச்சினை நீண்டு செல்லுகின்ற வேளையில் வடமாகாணத்தில் நிலைகொண்டுள்ள கடற்படை வீரர்கள் மற்றும் கடற்படை முகாம்கள் தொடர்பான கேள்வி எழுந்துள்ளது. காரணம் அவர்கள் நிலைகொண்டுள்ள, முகாம்கள் அமைந்துள்ள காணிகள் எத்தனை குடும்பங்களுக்குச் சொந்தமானது என்பதுவும் சிந்திக்க வேண்டிய விடயமாகவும் காணப்படுகின்றது. அந்தவகையில் வடமாகாணத்தில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் தொடர்பான விபரங்கள் இலங்கை கடற்படைத் தலைமை அலுவலகத்திடமிருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலமாக (DNA/ADM/10(SD)III) கிடைக்கப் பெற்ற தகவல்களின்படி 2015 – 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வடமாகாணத்தில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் தொடர்பான விபரங்களை அட்டவணை 01 இன் மூலம் அறிந்து கொள்ளலாம். அதேவேளை வட மாகாணத்தில் எட்டு கடற்படை முகாம்கள் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SLNS எலார, SLNS கஞ்சதேவ, SLNS வேலுசுமன, SLNS உத்தர, SLNS அக்போ, SLNS கோதய்ம்பர, SLNS வசம்ப, வெற்றிலைக்கேணியில் அமைந்துள்ள கடற்படையினர் நிலைகொண்டுள்ள இடம் என்பனவே அவையாகும்.

அட்டவணை 01

இலஆண்டுஅதிகாரிகள்கடற்படை வீரர்கள்மொத்தம்
1201516943344503
2201616943094478
3201715341544307
4201814437833927
மொத்தம்6351658017215

இதேவேளை வட மாகாணத்தில் கடற்படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற வருமானம் பெறக்கூடிய தொழில் மற்றும் அதனால் பெற்றுக்கொள்ளப்படும் வருமானம் பின்வருமாறு அமைந்திருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு போர்ட் ஹெமன்ஹில் ஓய்வு விடுதியில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள இலாபம் 13,493,066.14 ரூபாவாகும். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தம்பகொலபட்டுன ஓய்வு விடுதியில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள இலாபம் 9,751,151.84 ரூபாவாகும். 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் இந்த ஓய்வு விடுதியில் இலாபம் பெறும் நோக்கில் கடற்படையினரின் நலன்புரி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

அட்டவணை 02 இல் வட மாகாணத்தில் சேவைபுரியும் கடற்படையினருக்கு 2015 – 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வழங்கப்பட்ட சம்பளம் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ளமுடியும். 

அட்டவணை 02

ஆண்டுசம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவுக்காக (போனஸ்) செலவிடப்பட்ட தொகை
2015ரூபா. 3,473,818,394.42
2016ரூபா. 3,599,638,966.48
2017ரூபா. 3,453,028,677.27
2018ரூபா. 3,294,365,044.67

வடக்கு மாகாணத்தில் நிலைகொண்டுள்ள படையினரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருப்பதற்கு அவர்கள் நிலைகொண்டுள்ள மக்களின் காணிகள் மற்றும் படையினரால் யுத்தகாலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கசப்பான சம்பவங்களுமே காரணமாக அமைந்திருக்கின்றன. ஆனால் வட மாகாணத்தில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் மேற்கொண்டிருக்கின்றனர் என்பதையும் மறந்து விடமுடியாது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள தகவல்களில் வட மாகாணத்தில் 52 அபிவிருத்தி செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

நயினாதீவு விகாரையில் போதனை நிலையமொன்றையும் மணிக்கோபுரமொன்றையும் நிர்மாணித்தல், கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தை அமைத்தல், எழுவைத்தீவு பிரதேசத்தில் கப்பல் தரிப்பிட இடத்தை நிரமாணித்தல் (ஜெட்டிய), யாழ். பல்கலைக்கழகத்துக்காக நீர் சுத்திகரிப்பு நிலையம் 2 அமைத்தல், கீரிமலை பிரதேசத்திற்கான நீர்தாங்கியொன்றை அமைத்தல், யாத்திரிகர்களுக்காக கச்சதீவில் மலசலகூடத் தொகுதியொன்றை நிர்மாணித்தல், டெல்ப் ஜெட்டிய தயாரித்தல் கட்டம் I, கய்ட்ஸ் ஜெட்டியவில் நீர் வழியொன்றை அமைத்தல், யாழ். பொலிஸ் நிலையத்துக்கு நீர் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைத்தல், எழுவைத்தீவுக்காக நீர் சுத்திகரிப்பு நிலையமொன்றை புனரமைத்தல், நீர் சுத்திகரிப்பு வடிகாலமைப்பொன்றை பொருத்துதல் மற்றும் கட்டிடத்தை நிர்மாணித்தல் – நயினாதீவு ஊறணி மீன்பிடி துறைமுகம் அமைத்தல், டெல்ப் ஜெட்டிய தயாரித்தல் கட்டம் II, நீர் சுத்திகரிப்பு வடிகாலமைப்பொன்றுக்காக கட்டிடமொன்றை நிர்மாணித்தல் – யாழ் வைத்தியசாலை, யாழில் ஆயர் இல்லமொன்றை நிர்மாணித்தல், யாழ். ஆயர் இல்லத்துக்கு அருகில் உதவிப்பங்குத்தந்தைக்கான இல்லமொன்றையும் அதைச்சுற்றி வேலி அமைத்தல், அல்லப்பிட்டி சிறுவர் பாடசாலைக்கான கட்டிடம் அமைத்தல், வேலணை மத்திய மகா வித்தியாலயத்துக்கு கூடைப்பந்து மைதானத்தை நிர்மாணித்தல், அல்லப்பிட்டி புனித பிலிப்ஸ் மேரி தேவாலயத்தின் மணிக்கோபுரத்தை புனரமைப்புச் செய்தல், புங்குடுதீவு மேற்கில் நீலசெவன கட்டிடத்தை நிர்மாணித்தல்.

நல்லிணக்கம் கொண்ட செயற்பாடுகள் வேலைத்திட்டத்தின் கீழ் நாரந்தனையில் கிராமசக்தி கட்டிட நிர்மாணிப்பு, மண்டைத்தீவு மேற்கில் சிறுவர் பாடசாலையை நிர்மாணித்தல், ஆரம்ப சுகாதார மத்திய நிலையத்தை நிர்மாணித்தல், வடமராட்சி சிவனொளி ஆரம்ப பாடசாலையின் கட்டிடத்தை நிர்மாணித்தல், நாகர்கோவில் மேற்கில் கட்டிடமொன்றை நிர்மாணித்தல், டெல்ப்ட் பகுதியில் ஆண் மற்றும் பெண்களுக்கான மலசலகூடம் மற்றும் குளியலறை நிர்மாணித்தல், டெல்ப்ட் தீவிலுள்ள கடற்படை தையல் நிலையத்தினூடாக அங்கு வாழும் 36 தமிழ் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்துள்ளதோடு அதனூடாக அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக நேரடி உதவியை வழங்குதல், இந்த பிரதேசத்தில் காணப்படும் குடிநீருக்கான கட்டுப்பாடு காரணமாக அல்லல்படும் தீவு மக்களுக்காக வேண்டி இலங்கை கடற்படை கப்பல் வசம்ப நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படும் குடிநீரில் சுமார் 2000 லீற்றர் வரை பெற்றுக்கொடுத்தல், மண்டைத்தீவு அருகில் 3000 கடற்தாவரங்களை நட்டு வைத்தல், மண்டைத்தீவு மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தை புனரமைத்தல், மண்டைதீவு கிராமசேவகர் பிரிவில் முன்பள்ளியொன்றை நிர்மாணித்தல் போன்று இன்னும் பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு வட மாகாணத்தில் நிலைகொண்டுள்ள கடற்படையினால் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையையும் மறுக்க முடியாது. அதேவேளை மக்களுடைய பூர்வீக காணிகளில் அமையப்பெற்றுள்ள கடற்படை முகாம்களின் காரணமாக சொந்த நிலமின்றி தவிக்கும் மக்கள் மீள்குடியேற முடியாமல் தவிப்பதையும் அவதானிக்க முடிகின்றது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றங்களை துரிதப்படுத்துவதற்கு காணி விடுவிப்புகள் மேற்கொள்ளப்படாமையும் மாற்று காணிகளை மக்கள் விரும்பாமையுமே காரணமாக இருக்கின்றது. எனவே இவை தொடர்பாக அரசாங்கமும் பாதுகாப்பு அமைச்சும் கவனம் செலுத்த வேண்டும். 

News

பொருளாதார நெருக்கடியால் தொழில்தேடி வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ந.லோகதயாளன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ்  மாவட்டச் செயலகங்கள் மற்றும் வெளிநாட்டு…

By In
News

நுவரெலியாவில் சட்டவிரோதமான கட்டுமானங்களின் பின்னணியில் அரசியல் அதிகாரமா?

ஆர்.எப்.எம் சுஹேல்- நுவரெலியா உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் உட்பட பலரது வீடுகள் உரிய விதிமுறைகளைப் பேணாது சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக…

By In
News

தேசிய பாடசாலை தொடர்பான கட்டுக்கதையும் ஆசிரியர் வெற்றிடங்களும்

மகேந்திர ரந்தெனிய மூன்று வருடங்களாகக் கல்வி சீர்திருத்தக் குழுக்களுக்குப் பல கோடிக்கணக்கில் பணம் செலவழித்தும் எந்தப் பலனும் கிடைக்கப்பெறவில்லை என்பதை ஊடகங்கள் அவ்வப்போது வெளிப்படுத்திவருகின்றதை  காணக்கூடியதாக உள்ளது….

By In
News

தொடரும் இலங்கை – இந்திய மீனவர் கைதுகள்!

க.பிரசன்னா இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்ட வரலாற்றைக் கொண்டது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட பின்னர் ஆரம்பமான பிரச்சினை, இப்போது சட்டவிரோத மீன்பிடி முறையினால் வேறு…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *