Uncategorized

இலங்கையின் விவசாயத்துறையில் இரசாயன உர நுகர்வு எவ்வளவு?

By In

க.பிரசன்னா

ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தின் அடிப்படையில் இலங்கையில் இரசாயன உர இறக்குமதிக்கு தடை விதிக்கும் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டது. சேதன பசளையின் மூலம் பசுமை விவசாயத்தை நோக்கி நகரும் தீர்மானத்தின் விளைவாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் சேதன பசளை தொடர்பாக எவ்வித தீர்மானமும் இன்றிய நிலையில் இரசாயன உர இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டமையின் விளைவாக நாட்டின் விவசாயத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் சீன சேதன பசளை மற்றும் இந்தியாவின் நனோ நைட்ரஜன் திரவ உரம் என பல பிரச்சினைகள் வந்து சேர்ந்தன. நாடு முழுவதுமான விவசாயிகளின் பல எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் மீண்டும் இரசாயன உர இறக்குமதிக்கான அனுமதி அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது 12 நிறுவனங்களுக்கு இரசாயன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நாட்டில் இரசாயன உர இறக்குமதி தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் சேதன பசளை உற்பத்தி மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சிடம் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது. அதன்படி, இலங்கையில் இரசாயன உர இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதற்கு முன்பாக 49 நிறுவனங்களுக்கு இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன் அந்நிறுவனங்களினால் 199 வகையான இரசாயன உர வகைகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. இலங்கையில் 2012 – 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 12,785,802.95 மெட்ரிக் தொன் இரசாயன உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

‘இரசாயன உர இறக்குமதிக்காக இலங்கை 2019 இல் 221 மில்லியன் டொலர்களை செலவிட்டது. எண்ணெய் விலை அதிகரிப்புடன், அந்த செலவு 300-400 மில்லியன் டொலர் வரை அதிகரிக்கும். இரசாயன உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றிற்கு பெரும் செலவு செய்த போதிலும், விவசாய உற்பத்தியில் தரமான அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். 

மண் வளம் குறைந்து விளைச்சல் குறைந்து, பல்லுயிர் அழிவுக்கு வழிவகுத்துள்ளது. இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு ஆறுகள் மற்றும் நீரோடைகளை மாசுபடுத்துவதுடன், தரமான குடிநீர் விநியோகத்திற்கு கடுமையான சவாலாக உள்ளது. சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்ட பல தொற்றா நோய்களுக்கான அரசாங்க செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகின்றன. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரங்கள் இழக்கப்படுதல், சுகாதார நிலைமைகள் மோசமடைதல் மற்றும் மக்களின் உற்பத்தித்திறன் குறைதல் ஆகியவை நாடு எதிர்கொள்ளும் சவாலாக மாறியுள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் இலங்கையில் இரசாயன உர இறக்குமதிக்கான தடை அமுலுக்கு வந்தது. 

2021 ஆம் ஆண்டு நெல்லுக்காக 382,000 மெட்ரிக் தொன் இரசாயன உரம் வழங்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டப் பயிர்களுக்காக 438,666.09 மெ.தொன் உரமும் சிறுதோட்ட பயிர்களுக்காக 59,761 மெ.தொன் உரமும் தானியங்களுக்காக 91,039 மெ.தொன் உரமும் ஏனைய பயிர்களான வெங்காயம், மிளகாய், கிழங்கு, மரக்கறி மற்றும் பழ வகைகள் ஆகியவற்றுக்கு 261,146 மெ.தொன் இரசாயன உரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 2,881,092 ஹெக்டேயர் பயிர்ச்செய்கை நிலங்களுக்காக 1,259,855.09 மெட்ரிக் தொன் உரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் வழங்கியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2010 – 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 9,455,625.57 மெ.தொன் மானிய உரமும் 3,166,420.94 மெ.தொன் திரவ உரமும் 163,756.44 மெ.தொன் கலப்பு உரமும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையில் இரசாயன உர இறக்குமதி தொடர்பான மேலதிக விடயங்களை வரைபுகளில் காணலாம். 

2021 ஆம் ஆண்டு 12 நிறுவனங்களுக்கு 193,727.85 மெட்ரிக் தொன் இரசாயன உரத்தினை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை நெல்லுக்கான உர இறக்குமதிக்கு இலங்கை உரக்கம்பனி மற்றும் கொழும்பு வர்த்தக உர கம்பனிகளுக்கு 116,349 மெட்ரிக் தொன் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதேவேளை 2020 – 2021ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 36 நிறுவனங்களுக்கு சேதன பசளை உற்பத்திக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனங்களில் 29 நிறுவனங்கள் மாதாந்தம் 71,851 உரத்தினையும் 1,502,520 லீட்டர் திரவ உரத்தினையும் உற்பத்தி செய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் உரம் தொடர்பிலான தகவல்கள் இல்லையென தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. 

இதன் மூலம் இலங்கையில் கடந்த காலங்களில் சேதன பசளைகளை விட இரசாயன உர இறக்குமதிக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளமையினை அறிந்துகொள்ள முடிகின்றது. எனினும் வழங்கப்பட்டுள்ள தகவல்களில் உர இறக்குமதிக்காக செலவு செய்யப்படும் நிதி தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை. இலங்கையில் சேதன பசளை உற்பத்தி இடம்பெற்றாலும் அவை உள்நாட்டுத் தேவையினை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லை. எனவே இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்களின் தேவையினை பூர்த்தி செய்யக்கூடிய சேதன பசளையின் உருவாக்கத்துக்கான தேவை ஏற்பட்டுள்ளது.  

இவ்வாறு அரசாங்கத்தின் உடனடித் தீர்மானம் இலங்கையின் விவசாயிகளையும் உற்பத்திகளையும் சமீப காலங்களில் கடுமையாகப் பாதித்துள்ளது. விளைச்சல் குறைவு காரணமாக உணவுக்கான பற்றாக்குறை ஏற்பட்டதுடன் விலையும் அதிகரிக்கப்பட்டது. தற்போது நாட்டில் பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் மீண்டும் இறக்குமதியில் தங்கியிருக்கும் தேவை நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் டொலர் பற்றாக்குறையின் காரணமாக பொருட்களை இறக்குமதி செய்வதிலும் தடைகள் ஏற்பட்டுள்ளன. சர்வதேச அளவில் 100 வீத இயற்கை விவசாயத்துக்கு மாறும் முதல் நாடாக இலங்கையை மாற்றும் அரசாங்கத்தின் தீர்மானம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உணவு தேவையினை கடுமையாகப் பாதித்துள்ளது. இயற்கை விவசாயத்தை ஏற்றுக்கொண்டாலும் எவ்வித முன்னேற்பாடுகளும் இன்றி உடனடியாக அமுல்படுத்த துணிந்தமை அதன் பின்னடைவுக்கு காரணமாக அமைந்துள்ளது. 

News, Uncategorized

லங்காதீப செய்திப்பிரிவிற்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் விஜயம்

இணைந்த செயற்பாட்டு அணுகுமுறையை ஊக்குவிக்கும் வகையில், லங்காதீப பத்திரிகையின் பிரதம ஆசிரியர், உப ஆசிரியர் மற்றும் செய்திப்பிரிவு ஊடகவியலாளர்களை இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) RTI குழுவினர்…

By In
News, Uncategorized

சமூக பங்கேற்பு நிருவாக கருத்தியலும் இலங்கையில் உள்ளூராட்சி நிறுவனங்களும்

– சாமர சம்பத் பாராளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைப்புகள் போன்ற தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்புகளில், மக்களுக்கு மிக நெருக்கமான நிர்வாகக் கட்டமைப்பு உள்ளூராட்சி நிறுவனங்களேயாகும். தற்போதைய…

By In
News, Uncategorized

சபாநாயகர் பாராளுமன்ற மரபுகளை மீறியுள்ளாரா?

– சாமர சம்பத் முழுமையான ஜனநாயக ஆட்சிக் கட்டமைப்பில் சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றம் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. பாராளுமன்றம் சுயாதீன நிறுவனமாக நடத்தப்பட வேண்டும்…

By In
News, Uncategorized

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களைக் கோர முடியுமா?

தகவல் அறியும் உரிமைச் சட்டம், அதன் முக்கியத்துவம் மற்றும் RTI சட்டம் பற்றிய பொதுமக்களின் புரிதலை மேம்படுத்தும் நோக்கத்துடன், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் சமூக ஊடக தளங்களில்…

By In

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *